.

Pages

Monday, July 31, 2017

அமீரகத்தில் மீண்டும் அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு !

அதிரை அனைத்து முஹல்லா பிரதிநிதிகளின் சிறப்பு ஆலோசணைக் கூட்டம் துபை தமுமுக மர்கஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தாயகத்தில் உள்ள அதிராம்பட்டினம் முஹல்லா சங்கங்கள், அமீரகத்தில் செயல்படும் அதிராம்பட்டினம் முஹல்லா அமைப்புகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து கூட்டமைப்பாக செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஏற்கனவே கூட்டமைப்பாக செயல்பட்டு வந்த அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகம் கடந்த 2013 ஆம் ஆண்டிற்குப்பின் செயல்படாமல் இருப்பதால் அதற்கு பதிலாக புதிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதா?அல்லது அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு பெயரில் இயங்குவதா ? என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு இறுதியாக மீண்டும் அதே பெயரிலேயே புதிய உத்வேகத்துடன் புதிய நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி தொடர்ந்து செயல்படுவது என ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி தீர்மானத்தின் அடிப்படையில் முஹல்லாவுக்கு தலா 3 பேர் வீதம் அமீரகத்தில் செயல்படும் அதிரை அனைத்து முஹல்லா சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு எதிர்வரும் 18.08.2017 அன்று மீண்டும் கூடி ஆலோசித்து முதற்கட்ட செயல்வடிவம் தருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

முதற்கட்ட ஆலோசனை அமர்வில் அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்டோர் விவரங்கள்:
1. முஹமது அஸ்லம் - நெசவுத் தெரு
2. செய்யது மீரான் - நெசவுத் தெரு
3. காதர் அலி - தரகர் தெரு
4. பிஸ்மில்லாஹ் கான் - தரகர் தெரு
5. சேக் அலாவுதீன் - தரகர் தெரு
6. அதிரை மைதீன் - தரகர் தெரு
7. பக்கீர் முஹமது - கீழத்தெரு
8. ஜியாவுதீன் - கீழத்தெரு
9. முஹமது அஜீஸ் - கீழத்தெரு
10. நெய்னா முஹமது - கீழத்தெரு
11. முஹமது யூசுப் - நடுத்தெரு
12. அமீன் - நடுத்தெரு
13. அப்துல் காதர் - நடுத்தெரு
14. ஹாஜா முகைதீன் - மேலத்தெரு
15. முஹமது மாலிக் - மேலத்தெரு
16. சேக் நஸ்ருதீன் – மேலத்தெரு
17. சாகுல் ஹமீது  -- கடற்கரைதெரு

மேற்படி ஆலோசணைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத முஹல்லா சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அமீரகத்தில் செயல்படும் அதிராம்பட்டினம் முஹல்லா பிரதிநிதிகள் அவசியம் அடுத்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக கீழ்காணும் தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு எதிர்வரும் 15.08.2017 ஆம் தேதிக்குள் தங்களுடைய வருகையை உறுதி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

முஹமது மாலிக் - 055 2481483, 050 7914780

அழைப்பின் மகிழ்வில்...
புதிய அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பிரதிநிதிகள்
 

அவசர காலங்களில் 9 விமான நிலையங்களை பயன்படுத்த கத்தார் விமானங்களுக்கு அனுமதி!

அதிரை நியூஸ்: ஜூலை 31
சவுதி, அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய அரபு நாடுகள் கத்தாருடனான ராஜிய உறவுகளை துண்டித்துக் கொண்டதை தொடர்ந்து கத்தார் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவற்றில் வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழி போக்குவரத்தும் தடை செய்யப்பட்டன.

இந்நிலையில் சர்வதேச வான்வழி சட்டத்திற்கு ஏற்ப அவசரகாலங்களின் போது மட்டும் அருகிலுள்ள 9 சவுதி, அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து விமான நிலையங்களை பயன்படுத்திக் கொள்ளவும், விபத்துக்காலங்களில் மீட்புப்பணிகளில் உதவுவதற்கும் சவுதி அரேபியாவின் வான்வழி போக்குவரத்திற்கான ஆணையம் (General Authority of Civil Aviation - GACA) சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வருவதுடன் மேற்கொண்டும் இது தொடர்புடைய விஷயங்களை பேசி இறுதி செய்து கொள்வதற்கும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கிடையே சர்வதேச வான்வழி கழகத்தின் (International Civil Aviation Organization - ICAO) உதவியுடன் இன்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

அதிரையில் 3 மணி நேரம் பலத்த மழை !

அதிராம்பட்டினம், ஜூலை 31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை வீட கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், இப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் மழை பெய்தது. இதனால் இப்பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று திங்கட்கிழமை இரவு 8 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் அதிரையின் பிரதான வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீடித்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல் அய்ன் நகரில் கட்டண பார்க்கிங் திட்டம் அமல் !

அதிரை நியூஸ்: ஜூலை 31
அபுதாபி எமிரேட்டுக்கு உட்பட்ட பாலைவனச் சோலை நகரான 'அல் அய்ன்' நகரிலும் தலைநகர் அபுதாபியில் உள்ளது போன்ற கட்டண பார்க்கிங் திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்காக இதுவரை 121 பார்க்கிங் மண்டலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அல் கசீதாவில் 1376, அல் ரெபேனாவில் 1175, அல் நவாஸில் 1107, அல் ஹமீராவில் 1166, அல் சலாமாவில் 876 என பார்க்கிங் ஸ்லாட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி விவகாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் ஆகியவை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

குடியிருப்பு பகுதிகளில் பார்க்கிங் பெர்மிட்டுகள் தேவைப்படும் வெளிநாடுகளைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் அதிகபட்சம் 2 வாகனங்களை தங்களுடன் வைத்துக் கொள்ளலாம். முதல் வாகனத்திற்கு 800 திர்ஹமும் இரண்டாவது வாகனத்திற்கு 1200 திர்ஹமும் ஆண்டிற்கொருமுறை பார்க்கிங் பெர்மிட் கட்டணம் செலுத்த வேண்டும்.

குடியிருப்பு பகுதிகளுக்கான பார்க்கிங் பெர்மிட் பெற தேவையான ஆவணங்கள்:
1. செல்லுபடியாகும் பாஸ்போர்ட் காப்பி மற்றும் ரெஸிடென்ஸி விசா காப்பி.
2. வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம்.
3. கடைசியாக மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது.
4. சொந்த வாகனம் தான் என்பதற்கான ஆவணங்கள்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

50 ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் பலியான இந்திய பெண்ணின் கை மீட்பு !

அதிரை நியூஸ்: ஜூலை 31
பிரான்ஸ் நாட்டு பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் 2 ஏர் இந்திய விமானங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் பயணம் செய்த இந்திய பெண் பயணியின் கை எனக் கருதப்படும் சிதிலமடையாத உடல் பாகம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

1950 ஆம் ஆண்டு நடந்ததோர் விபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 48 பயணிகள் உயிரிழந்தனர். அதே பகுதியில் 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு ஏர் இந்தியா போயிங் 707 ரக விமான விபத்தில் 117 பயணிகளும் உயிரிழந்தனர். இந்த இரு விமான விபத்துக்களும் மாண்ட் பிளாங்க் பகுதியில் நடைபெற்றது.

விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் 4 எஞ்சினில் 1 எஞ்சினும் இந்தக் கையுடன் கிடைத்துள்ளது. வேறு சில உடற்பாகங்களும் கிடைத்துள்ள போதிலும் அவை இந்த கைக்குரிய இந்திய பெண் பயணியுடையது அல்ல என இவற்றை கண்டுபிடித்த ஆய்வாளர் டேனியல் ரோச்சி என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்விரு விமான விபத்துக்களில், இந்தக் கை 1966 ஆம் ஆண்டு பம்பாயிலிருந்து (மும்பை) நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த பெண்ணுடையதாகவே இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

சுவீஸ் நாட்டு பகுதியில் உள்ள இதே ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் கடந்த 10 தினங்களுக்கு முன் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் மாயமான தம்பதிகள் இருவரின் உடல் கெடாமல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

கத்தார் ஹஜ் பயணிகளை தடுப்பதாக வெளியான குற்றச்சாட்டிற்கு சவுதி மறுப்பு !

அதிரை நியூஸ்: ஜூலை 31
கத்தார் மீதான சவுதி உட்பட சில அரபு நாடுகளின் தடையும் அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் பஞ்சாயத்துக்களும் யாவரும் அறிந்ததே. இந்நிலையில் கத்தாரிலிருந்து செல்லும் ஹஜ் பயணிகளை தடுப்பதாக கத்தார் எழுப்பிய குற்றச்சாட்டை சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

வருடந்தோறும் சுமார் 1600 கத்தார் பிரஜைகளும் சுமார் 400 கத்தார்வாழ் வெளிநாட்டு பிரஜைகளும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டும் அதேயளவு ஹஜ் பயணிகள் வருகை தர எந்தவித் தடையுமில்லை என்றும் ஆனால் அவர்கள் கத்தார் ஏர்லைன்ஸ் தவிர்த்து சவுதி ஹஜ், உம்ரா அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த விமான சேவையையும் பயன்படுத்தி வரலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தடையை தொடர்ந்து கத்தார் மற்றும் சவுதிக்கு இடையிலான தரைவழி போக்குவரத்து மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், கத்தார் நாட்டு ரியால்கள் வழமைபோல் சவுதியில் செல்லும் என்றும் ஹஜ் பயணிகள் கத்தார் ரியால்களை தங்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 20 ஆம் தேதி வருகை தந்த கத்தார் நாட்டு ஹஜ் பயணிகள் பிற நாட்டு ஹஜ் பயணிகளைப் போலவே மனமுவந்து வரவேற்கப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Sunday, July 30, 2017

அதிரையில் குளிர்ந்த காற்றுடன் மழை !

அதிராம்பட்டினம், ஜூலை 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை வீட கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், இப்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திடீர் மழை பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்து பெய்தது. சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் இரவு 7 மணிக்கு குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் இப்பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

அதிரை அட்ஜயா பல் மருத்துவமனை இலவச பல் மருத்துவ முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை இரண்டாமாண்டு துவக்க விழாவையொட்டி, இலவச பல் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். அட்ஜயா பல் மருத்துவமனை பல் மருத்துவர்கள் பா.பாரதி, ஜி.பிரியங்கா, ஆர். கார்த்திகா, ஏ.நிரஞ்சனா தேவி ஆகியோர் கலந்துகொண்டு பல் மருத்துவப் பரிசோதனை செய்தனர்.

முகாம் ஏற்பாட்டினை மகிழங்கோட்டை ஜி பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை ஆதிராஜாராம் செய்தனர். இதில் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக பல் சம்பந்தபட்ட பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் 100 பேருக்கு அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனையில் மேற்கோள் சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டனர்.

இம்முகாமில், சிறப்பு அழைப்பாளர்களாக அதிரை பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலர் வீரகணேஷ. சேதுராமன், ரோட்டரி சங்க மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் கே. விவேகானந்தன், பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், முஹம்மது நவாஸ்கான், அகமது மன்சூர் மற்றும் ஊர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 

அமீரக ஆகஸ்ட் மாத சில்லரை பெட்ரோல் விலையில் சிறு ஏற்றம்!

அதிரை நியூஸ்: ஜூலை 30
அமீரகத்தில் மாதமாதம் சர்வதேச கச்சா விலைக்கு ஏற்ப சில்லரை பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த 3 மாதங்களாக (ஏப்ரல், ஜூன், ஜூலை) மாதங்களில் சிறிதுசிறிதாக சரிந்து வந்த விலையில் சற்றே ஏற்றம் காண்பதால் எதிர்வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதிமுதல் பெட்ரோலுக்கு 3 காசுகளும் டீசலுக்கு 4 காசுகளும் விலையேற்றப்படுகின்றன.

குறிப்பு: அடைப்புக்குறிக்குள் உள்ளவை கடந்த மாத பெட்ரோல் விலை ஒப்பீட்டுக்காக.
ஸ்பெஷல் 95 : புதிய விலை 1.78 திர்ஹம் (1.75)
சூப்பர் 98 : புதிய விலை 1.89 திர்ஹம் (1.86)
ஈ பிளஸ் 91 : புதிய விலை 1.71 திர்ஹம் (1.68)
டீசல் : புதிய விலை 1.88 திர்ஹம் (1.84)

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அதிரையில் வீடு தேடிச்சென்று பாலகர்களுக்கு குர்ஆன் கற்பிக்கும் தலைமை இமாம் !

அதிராம்பட்டினம், ஜூலை 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் சேக் அலாவுதீன் (வயது 74). பிலால் ( ரலி ) பள்ளிவாசல் தலைமை இமாம். இப்பள்ளிவாசலில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தொழுகை நடத்தி வருகிறார். இப்பள்ளியில் அதிகாலை இவர் எழுப்பும் கணீர் குரலின் பாங்கொலியால் உறங்கிக்கொண்டிருக்கும் அனைவரையும் சுப்ஹ் தொழுகைக்கு பள்ளிவாசல் பக்கம் அழைப்பவர். மழை, குளீர், காற்று, இருட்டு என எவ்வித சீதோசன நிலை ஏற்பட்டாலும் தொய்வில்லாமல் பணியாற்றுபவர்.

சரி விசயத்திற்கு வருவோம்...
பிலால் ( ரலி ) பள்ளிவாசல் அமைந்துள்ள பிலால் நகர் பகுதியில் வசிக்கும் இளம் சிறார்களுக்கு அடிப்படை இஸ்லாமிய மார்க்கக் கல்வியான குர்ஆன் கற்பித்தல், அரபி மொழி எழுத்துப்பயிற்சி, சூரா மனனம், நல்லொழுக்கப்பயிற்சி போன்றவற்றை கற்பித்து வருகிறார். முதிய வயதில் வீடு தேடிச் சென்று கணீர் குரலில் இளம் சிறார்களுக்கு குர்ஆன் கற்பிக்கும் இவரது சேவைப் பணி பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுகிறது.

இவரது சேவைப்பணி தொய்வில்லாமல் தொடர்ந்திட இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் என்றென்றும் வழங்குவானாக...

அபூ அஜீம்

Saturday, July 29, 2017

தஞ்சாவூரை திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக்க அலுவலர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் திறந்த வெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக மாற்றுவதற்கான கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ. அண்ணாதுரை தலைமையில் இன்று 29-07-2017 நடைப்பெற்றது.      
       
ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது;
வருகின்ற 30-09-2017 அன்று திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் அறிவிக்கப்படவுள்ளது. இதனை செயல்படுத்தும் விதமாக  தற்பொழுது  உள்ள 589 ஊராட்சிகளில் 244 ஊராட்சிகள் திறந்தவெளி கழிப்பிடமற்ற ஊராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 345 ஊராட்சிகள்  புதிதாக 87129 கழிப்பிடங்கள் கட்டப்படவுள்ளது.        
          
மேலும், 34292 கழிப்பிடங்கள்  புரணமைக்கப்படவுள்ளன. இப்பணிகள் அனைத்தும் வருகின்ற 30-09-2017 முடிப்பதற்கு அனைத்து உதவி இயக்குநர் நிலையான அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி,ஊ-வ,ஊ) உதவி –ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய பணிமேற்பார்வையாளர்கள்  மற்றும் ஊராட்சி அளவிலான கள அலுவலர்கள்  ஒருங்கிணைத்து பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டு  பணிகள் முடிக்கப்படவேண்டும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

இப்பணிகள் அனைத்தும் விரைவாக நிறைவுபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை கேட்டுக்கொண்டுள்ளார்,
 
இவ்ஆய்வுக்கூட்டத்தில் பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பி. மந்திராசலம், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கு. இந்துபாலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர்(ஊ,வ) சு.சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் ஜூலை 31 ந்தேதி மின்தடை!

அதிராம்பட்டினம், ஜூலை-29
அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் வரும் திங்கட்கிழமை ( ஜூலை 31 ) மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் வரும் ஜூலை-31 ந் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கில்லாடி கடன்காரி !

அதிரை நியூஸ்: ஜூலை 29
'கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்றான் அருணாச்சல கவிராயர் ஆனால் மாற்றாக சீனாவில் கடன்கொடுத்தவர்கள் கலங்கிய செய்தி இது.

மத்திய சீனாவின் ஊஹான் நகரைச் சேர்ந்த 59 வயது பெண் ஜூ நஜூவான் என்பவர் வங்கிகளில் வாங்கிய கடன் 25 மில்லியன் யுவான் (3.71 மில்லியன் டாலர்) பணத்தை திரும்பக் கட்டும்படி சீன நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் என்ன? நாங்க அதுக்கும் மேலே என யோசித்த அந்தப் பெண் பிறரிடம் வாங்கிய கிரடிட் கார்டுகளை உபயோகித்து தனது முகத்தை 30 வயது பெண் போல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். பலருடைய அடையாள அட்டைகளை பயன்படுத்தி சீனாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து இறுதியாக தென்கிழக்கு சீனாவின் ஸென்ஷென் நகரில் வந்து தங்கிவிட்டார்.

வலைவீசி தேடிய போலீஸ் ஒருவழியாக அந்த பெண்ணை நெருங்கும் போது தலைசுற்றிப் போனது போலீஸ் 59 வயது பாட்டியை தேடிப்போனால் அங்கிருப்பதோ 30 வயது பெண். கடனிலிருந்து தப்பிப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முக வடிவை மாற்றிக் கொண்ட குட்டு உடைபட தற்போது கம்பி எண்ணுகிறார் அந்த கில்லாடி கடன்காரி, மல்லையாவின் கான்டக்ட் கிடைக்கவில்லையா அல்லது கேள்விப்படவில்லையா எனத் தெரியவில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

புனித மக்கா - மதீனா ஹரமைன் எக்ஸ்பிரஸ் சோதனை ஓட்டம் தொடக்கம் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 29
புனித மக்கா நகரிலிருந்து ஜித்தா வழியாக புனித மதீனா நகர் வரை செல்லும் ஹரமைன் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் முதற்கட்டமாக ஜித்தாவிலிருந்து கிங் அப்துல்லா எகனாமிக் சிட்டி எனப்படும் அல் ரபீஹ் வரை சோதனை ஓட்டம் செய்யப்பட்டது பின்பு அங்கிருந்து 2 ஆம் கட்டமாக புனிதமிகு மதீனா நகர்வரை மணிக்கு 300 கி.மீ வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மரண அறிவிப்பு ( மதினா பேகம் அவர்கள் )

அதிரை நியூஸ்: ஜூலை 29
அதிராம்பட்டினம், ஏ.ஜே நகரைச் சேர்ந்த ஹாஜி எம்.எஸ் அன்வர் பாட்சா அவர்களின் மனைவியும், அகமது அஸ்ரப், அகமது, அகமது அனஸ் ஆகியோரின் தாயாரும், தாஜுதீன், ஹாஜா நகர் தமீம் ஆகியோரின் மாமியாருமாகிய மதினா பேகம் அவர்கள் நேற்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (29-07-2017) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக துஆ செய்வோம்.

மலேசியாவில் அதிரையரின் நூல் வெளியீட்டு விழா (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் 'கம்யூட்டர்' புகாரி. தமிழ் இலக்கியம் மீது தீராத பற்றுகொண்டவர். இவரது இலக்கியச் சேவையை பாராட்டி மலேசியா அரசு பல்வேறு விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளது. தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் மற்றும் மலேசிய கலை பண்பாட்டு சபா சார்பில் சிறப்பு விருதையும் பெற்றுள்ளார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் படித்து பயன்பெற வேண்டி 'வருங்காலத் தூண்கள்' என்ற விழிப்புணர்வு நூலை எழுதி இருக்கிறார். இந்நூலில் மலேசியா அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் வாழ்த்துரை வழங்கி கெளரவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலேசியாவில் வெளியாகும் பிரபல தமிழ் நாளிதழ்களில் கட்டுரை, சிறுகதை ஆகியவற்றை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியம் தொடர்பான பல்வேறு கருத்தரங்க, பேச்சரங்க நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்குபெற்று வருகிறார்.

இந்நிலையில், இந்நூலின் வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மலேசியா இந்தியன் காங்கிரஸ் முஸ்லீம் சங்கத் தலைவர் டத்தோ ஸ்ரீ செனட்டர் செய்யது இப்ராகிம் தலைமை வகித்து, நூலை வெளியீட்டு வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக, மலேசியா இந்திய சமுதாய மேம்பாட்டு இயக்கத் தலைவர் எஸ்.பி மணிவாசகம் வரவேற்றுப் பேசினார். விழாவில் நூல் ஆசிரியர் அதிரை கம்ப்யூட்டர் புகாரி ஏற்புரை வழங்கி அனைவருக்கும் நன்றி கூறினார். இவ்விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
'வருங்காலத் தூண்கள்' நூல்

தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் மற்றும் மலேசிய கலை பண்பாட்டு சபா சார்பில் சிறப்பு விருது பெற்ற போது...