![]() |
கட்டுமானப்பணியில் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் |
தமிழகத்தில் சென்னையில் தொடங்கி செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி வரையிலான பாதை பிரதான ரயில் பாதையாக இருக்கிறது. இதில், இரட்டைப்பாதை அமைக்கும் பணிகள் திண்டுக்கல் வரை நிறைவடையும் நிலையில் உள்ளன.
மக்களின் ரயில் போக்குவரத்து தேவை அதிகரித்து வருவதால் சென்னையில் இருந்து பெருங்குடி, மாமல்லபுரம், கடலூர், காரைக்குடி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கூடங்குளம், நாகர்கோவில் வழியாக சுமார் 1,003 கி.மீ. தொலைவுக்கு கிழக்கு கடலோர ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதை 4 பகுதிகளாகப் பிரித்து பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.
இதில், தற்போது சென்னை பெருங்குடி - கடலூர் புதிய பாதை திட்டத்தில் சிறிய மாற்றம் செய்து சென்னை செங்கல்பட்டு மாமல்லபுரம் கடலூர் திட்டமாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், கல்பாக்கம், செய்யூர், மரக்காணம், புதுச்சேரி, வரக்கால்பட்டு, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, பேரளம், காரைக்கால், நாகூர், திருக்குவளை, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக் கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி, காயல்பட்டினம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கூடங்குளம், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி வரை வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், சென்னை செங்கல்பட்டு, வரக்கால்பட்டு பேரளம், காரைக்கால் நாகப்பட்டினம், நாகர்கோவில் கன்னியாகுமரி என 191 கி.மீ. தொலைவுக்கு தற்போது ரயில்கள் செல்கின்றன. பேரளம் காரைக்கால், நாகப்பட்டினம் திருக்குவளை திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி ஆகிய இடங்களில் நடந்துவரும் அகலப்பாதை பணிகள் இந்த ஆண்டில் முடிவடையும் நிலையில் உள்ளன. இந்தத் திட்டத்துக்காக கடந்த மத்திய பட்ஜெட்டில் ரூ.240 கோடி ஒதுக்கீடு செய்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன.
பணி தொடங்கவேண்டிய இடங்கள்:
செங்கல்பட்டு, மாமல்லபுரம் வழியாக கடலூருக்கு 100 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை, ரயில்வே வாரியம் ஏற்கெனவே அறிவித்து தற்போது நிதி ஒதுக்கீடு பட்டியலில் இத்திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.
30 ரயில் நிலையங்கள்
காரைக்குடி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில் இடையே கடலோர வழியாக சுமார் 462 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்க 2009-ல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 30-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் பரிந்துரைக்கப்பட்டன.
இத்திட்டத்துக்கு சுமார் ரூ.1,965 கோடி செலவாகும் என்றும் கூறப்பட்டது. இதை திட்டத்தில் சேர்க்க ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘செங்கல்பட்டு கடலூர், காரைக்கால் நாகர்கோவில் வழித்தடங்களில் கடந்த 7 ஆண்டுகளாக பல கட்டமாக ஆய்வுகள் நடத்தப்பட்டு முடியும் நிலையில் இருக்கின்றன. அதன்பிறகு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இத்திட்டத்துக்கு போதிய நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசிடம் வலியுறுத்தப்படும். போதிய அளவில் நிலங்கள் கிடைத்த பிறகே திட்டத்தை படிப்படியாக நிறைவேற்ற முடியும்’’ என்றனர்.
இதுதொடர்பாக டிஆர்இயு துணை பொதுச் செயலாளர் மனோகரன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கிழக்கு கடலோர ரயில் திட்டத்தை இணைக்கும் வகையில் ஏற்கெனவே, சில இடங்களில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. எஞ்சியுள்ள பகுதிகளையும் இணைத்து கிழக்கு கடலோர ரயில்பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, செங்கல்பட்டு மாமல்லபுரம் கடலூர், காரைக்குடி - நாகர்கோவிலுக்கு ரயில்கள் இயக்கும் வகையில் கடலோர ரயில் பாதை அமைக்க வேண்டும். ஒட்டுமொத்த ரயில் பாதையில் தற்போது 54 சதவீத பாதைகள் தயார் நிலையில் உள்ளன. இத்திட்டத்தை விரைவாக முடித்தால், பயணிகளுக்கு மட்டுமல்லாமல், தூத்துக்குடி துறைமுகத்துக்கான சரக்கு போக்குவரத்துக்கும் வசதியாக இருக்கும்’’ என்றார்.
நன்றி: 'தி இந்து' தமிழ்
Published: 23 Jul 2017
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.