.

Pages

Tuesday, July 25, 2017

அதிரையில் காயல்பட்டினம் அணி சாம்பியன்: நேரடி ரிப்போர்ட் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 25
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழகம் 23 ஆம் ஆண்டு, எஸ்.எஸ்.எம் குல் முஹம்மது நினைவு 17 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி, கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூன் 27ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

இதில், காரைக்குடி, காரைக்கால், நாகூர், காயல்பட்டினம், திருச்சி, தஞ்சை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, கரம்பயம், புதுக்கோட்டை, கண்டனூர், கோவை, மன்னார்குடி உள்ளிட்ட 26 அணிகள் கலந்துகொண்டு விளையாடியதில் காயல்பட்டினம், தஞ்சாவூர், திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய 4 அணிகள் அரையிறுதி ஆட்டங்களில் விளையாட தகுதி பெற்றது. இதில் திண்டுக்கல், காயல்பட்டினம் ஆகிய அணிகள் இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

இதையடுத்து, தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க வீரர்கள் மைதானத்தை சுற்றி அணிவகுத்து சென்றனர்.

தொடக்கத்தில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கால்பந்தாட்ட முன்னாள் மூத்த வீரர் ஹாஜி ஜமால் வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து ஆட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் திண்டுக்கல் செவன்ஸ் திண்டுக்கல் அணியும், காயல் ஸ்போர்ட்டிங் கிளப் காயல்பட்டினம் அணியும் விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பகுதி நேர ஆட்டத்தில் காயல்பட்டினம் நட்சத்திர வீரர் முகமது அலி முதல் கோல் போட்டார். பின்னர் நடந்த மற்றொரு பகுதிநேர ஆட்டத்தில் காயல்பட்டினம் அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் முஹம்மது ஹனீபா 2 கோல்கள் போட்டு தனது அணி வெற்றி பெற பெரிதும் உதவினார். ஆட்ட முடிவில் காயல்பட்டினம் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர்.

ஆட்ட நடுவர்களாக சத்திய மூர்த்தி, மூர்த்தி ஆகியோர் பணியாற்றினார்கள். நிகழ்ச்சியினை கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் தொகுத்து வழங்கினார்.

இதைதொடர்ந்து, பரிசளிப்பு விழா மைதானத்தில்  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடற்கரைத்தெரு ஜமாத் மூத்த நிர்வாகி ஹாஜி அக்பர் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் இளைஞர்கள் கால்பந்துக் கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் பரிசளிப்பு விழா பேருரை நிகழ்த்தி, வெற்றி பெற்ற காயல்பட்டினம் அணிக்கு பதக்கங்கள் அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

மேலும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட ஹாஜி அக்பர், ஹாஜி ஜமால், கால்பந்தாட்டக் கழக தஞ்சை மாவட்ட முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம், அதிரை கால்பந்தாட்டக் கழக செயலாளர் கவுன்சிலர் பசூல்கான், கால்பந்தாட்ட பயிற்சியாளர் வாசுதேவன் உள்ளிட்டோர் தொடர் போட்டியின் வின்னர், ரன்னர் அணிகளுக்கு ரொக்கப்பரிசு ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், சுழற்கோப்பை, பதக்கங்கள் ஆகிய பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். மேலும் தொடர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காயல்பட்டினம், திண்டுக்கல் அணிகளின் சிறந்த வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

முன்னதாக கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் வரவேற்றுப் பேசினார். விழா முடிவில்  ஜபருல்லா நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை பசூல்கான், சாரா அஹமது, ரபீக், ஜம்சித், புஹாரி, சாகுல்ஹமீது, ஹனி சேக், ஜமால் முஹம்மது ஆகியோர் செய்தனர். இன்றைய இறுதி ஆட்டம் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் வருகை தந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.