![]() |
எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், தலைமை ஆசிரியர் ( ஓய்வு ) |
அமெரிக்கா அதிபரைக் கவர்ந்த அணு விஞ்ஞானி:
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் திரு. பில்கிளிண்டன் அவர்கள் இந்தியாவுக்கு ஒருமுறை வருகை தந்தார். அப்போது அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளப் பலரும் விருப்பம் தெரிவித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்தியக் குடிமக்களின் விருப்பப்படி புகைப்படம் எடுத்துக்கொண்ட திரு.பில் கிளிண்டன் அவர்கள் இந்தியாவிலுள்ள ஒருவருடன் தாம் புகைப்படம் எடுத்தக்கொள்ள விரும்புவதாகக் கூறினார். 'அவர் யார்?' என வினவிய போது, "அமெரிக்க நாடே அறியா வண்ணம் அணுகுண்டுச் சோதனையை இந்தியாவில் 'பொக்ரான்' என்ற இடத்தில நிகழ்த்திக் காட்டினாரே அப்துல் கலாம் என்ற விஞ்ஞானி அவருடன் இணைந்துப் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்' என்று தெரிவித்தாராம். திரு. பில் கிளிண்டன் அவர்கள் அப்போது டாக்டர் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாமானியரையும் மதிக்கத் தெரிந்த சமதர்மவாதி:
இந்தியப் பிரதமரின் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றிய டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அப்பணியிலிருந்து விலகிய பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தில் கவரவப் பேராசிரியராகப் பணியாற்றினார். அப்போது அவருக்கும் நேர்முக உதவியாளராகப் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்டிருந்த திரு. பாலசுப்பிரமணியன் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது குறிப்பிட்டதாவது; "கலாம் சார் அவர்கள் மிக மிக எளிமையானவர். சாமானியர்கள் கூட அவரை எளிதாக அணுக முடியும். கலாம் அவர்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நேரத்தில் எனது தந்தை இறந்து விட்டார். இச்செய்தியைக் கேள்விபட்டதும் கலாம் சார் நங்கநல்லூரில் உள்ள எனது வீட்டுக்கு வந்துவிட்டார். இந்தியாவின் முதல் குடிமகன் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட இருந்த ஒருவர் சாதாரண ஊழியனான என் வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறிய சம்பவத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது"
குழந்தைகளைக் கொண்டாடிய குடியரசுத் தலைவர்:
உலகின் மிகப்பெரிய ஆட்சியாளர் மாளிகையான இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவும், 340 அறைகள் கொண்ட இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் அதிகமான பொதுமக்கள் நுழைய முடிந்தக் கால கட்டம் டாக்டர் கலாமுடைய காலக் கட்டமாகவே இருந்தது. அவ்வாறு வருகை தந்த பெரும் பகுதி விருந்தினர்கள் குழந்தைகள் மற்றும் மாணவர்கள்தாம். கலாம் அவர்கள் உயர் கல்வி பயின்ற இன்றைய 'ஸ்வார்ட்ஸ்' மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.பால்மாறன் குறிப்பிடுகிறார்;
"டாக்டர் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த போது அவரைச் சந்திக்க 60 மாணவர்களுடன் குடியரசு மாளிகைக்குச் சென்றோம். அங்குள்ள பாதுகாவலர்களால் மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட செய்தியை அறிந்த குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் அவர்கள் "வந்திருப்பவர்கள் என் குழந்தைகள். அவர்களை உள்ளே விடுங்கள்" எனப் பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டார். மாணவர்கள் மீது டாக்டர் கலாம் அவர்கள் கொண்டிருந்த அன்பும், ஆதரவும் என்றும் மறக்க முடியாவை"
காவலரிடம் கருணை காட்டிய கலாம்:
இரண்டாண்டுகளுக்கு முன் இதே ஜூலை 27 ந் தேதி அன்று தன உயிர் பிரிவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு சாமானிய பாதுகாப்புக் காவலரிடம் கலாம் அவர்கள் காட்டிய கருணையையும், மனிதாபிமானத்தையும் நினைவு கூர்கிறார் கலாமின் ஆலோசகராக இருந்த திரு ஸ்ரி ஜன்பால் சிங்; " மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் டாக்டர் கலாம் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். குவாஹாட்டி விமான நிலையத்திலிருந்து காரில் பயணம். கலாம் சாரோடு நானும் அந்தக் காரில் இருந்தேன். எங்கள் காருக்கு முன்னதாகச் சென்று கொண்டிருந்த ஜிப்சி வாகனம் ஒன்றில் ஒரு காவலர் நின்றபடிப் பயணித்தார். "அந்த நபர் ஏன் நின்று கொண்டே இருக்கிறார். அவர் சோர்ந்து விடுவார். அவருக்குத் தண்டனை போல் அல்லவா இருக்கிறது. ஏதாவது செய்யுங்கள். ஒயர்லெஸ் கருவி மூலம் தகவல் அனுப்பி அவரை அமரச் செய்யுங்கள்" என கலாம் சார் என்னிடம் கூறினார். "பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரை நிற்கும் படி மேலதிகாரி கூறியிருக்கலாம்" என்றேன். ஆனாலும் கலாம் சார் சமாதானம் அடையவில்லை. அடுத்த ஒன்றரை மணி நேரப் பயணத்தில் ஷில்லாங் சென்றதும் அந்த நபருக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும்' என்று அவர் என்னிடம் மூன்று முறையாவது நினைவுபடுத்தி இருப்பார். அந்த நபரைத் தேடிப்பிடித்து கலாம் சாரிடம் அழைத்துச் சென்றேன். அந்தக் காவலரிடம் கை குலுக்கிய அவர், எனக்காக நீ நீண்ட நேரம் நிற்க வேண்டியதாயிற்று. அதற்காக வருந்துகிறேன். சோர்வாக இருப்பாய். ஏதாவது சாப்பிடுகிறாயா?" என்றார். காலம் சாரின் பண்பைக் கண்டு வியந்த அந்தக்காவலர், "சார்! உங்களுக்காக 6 மணி நேரம் கூட நிற்பேன்" என்றார்.
நமது முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் சிறந்த விஞ்ஞானி மட்டுமல்லர். நல்ல எழுத்தாளரும் கூட. அவர் எழுதிய "அக்னிச் சிறகுகள்" என்ற அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் தமிழ் மொழியில் மட்டுமே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகிருப்பது, விற்பனையாகிக்கொண்டிருப்பது ஒரு வரலாற்றுச் சாதனை. அப்புத்தகத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உரிய ஊக்கத்தைத் தருகின்ற பல செய்திகள் உள்ளன. 'அக்னிச் சிறகுகள்' நூலைப் படித்து நாமும் டாக்டர் அப்துல் கலாம் காட்டுகின்ற வழியில் முன்னேற முயலுவோமே!
எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் ( ஓய்வு )
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.