![]() |
எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், தலைமை ஆசிரியர் ( ஓய்வு ) |
இன்று ஜூலை 15 ம் நாள். கல்வி வளர்ச்சி நாள். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் திரு. கே. காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டுத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வரும் கல்வி வளர்ச்சி நாளான இன்று கல்வியின் சிறப்பு மற்றும் அவசியம் பற்றியும், தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காகத் தமது ஆட்சிக் காலம் முழுவதும் அரும்பாடுபட்டு உழைத்த திரு. காமராஜர் அவர்கள் பற்றியும் நினைவு கூர்வது பொருத்தமாய் இருக்கும் எனக் கருதுகிறேன்.
இறைவன் தன் அருமறை அல்குர் ஆனில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறான் என்பதைக் கொண்டே கல்வியின் அவசியம் குறித்து உணர முடிகிறது. கற்றவரும், கல்லாதவரும் சமமாக மாட்டார்கள் என்பதை நாம் நன்கு விளங்கும் வண்ணம் எடுத்துக்காட்டு வாயிலாக,
"பார்வையுள்ளவனும், பாரவையற்றவனும் சமமாவார்களா ?" ( அல் குர்ஆன் 6:50 ) , " இருளும் ஒளியும் சமமாகுமா? " ( அல் குர்ஆன் 13:16 ) என்ற வசனங்கள் வாயிலாக உணர்த்துகிறான்.
மனிதர்களை விலங்கு நிலையிலிருந்து வேறுபடுத்தி மனிதனாக, மனிதனில் அறிஞனாக, அறிஞனில் ஒழுக்க சீலனாகச் சான்றோர் நிலைக்கு உயர்த்துவது கல்வி ஒன்றே. கல்வியின் அருமையை உணர்ந்த நம் முன்னோர்கள் கல்விக்கு முதலிடம் அளித்தனர். அதைத் தங்கள் நூல்கள் மூலமாக வெளிக்கொணர்ந்தனர்.
"கற்கை நன்றே ! கற்கை நன்றே !
பிச்சை புகினும் கற்கை நன்றே !"
என்ற பாடல் வழியாக பிச்சை எடுத்தாவது கல்வியைக் கற்றுக்கொள் என்று அதிவீரராமப்பாண்டியன் 'வெற்றி வேட்கை' என்ற தன்னுடைய நூலில் தெரிவிக்கிறார்.
ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வமாவது கல்வியே. அதைத்தவிர மற்றைய செல்வங்களெல்லாம் செல்வங்களகமாட்டா என்ற தனது கருத்தை வள்ளுவர்,
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை" என்ற குறளில் வழி கூறுகிறார்.
ஆட்சி அதிகாரம் படைத்தவர்களைக் காட்டிலும் கற்றவர்க்குச் சிறப்பு அதிகம் என்பதைக் தமிழ் மூதாட்டி அவ்வையார்,
"மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையோன்
மன்னற்குத் தன்சேதமல்லாத சிறப்பில்லை
கற்றவர்க்கும் சென்ற தேசமெல்லாம் சிறப்பு" என்ற பாடல் வழியாக வலியுறுத்துகிறார்.
எல்லா துன்பங்களையும் போக்குகின்ற மருந்தாகிய கல்வியைப்போல் எந்த உலகிலும் காணவியலாது என்ற கருத்தை 'நல்லடியார்' எனும் நூல்,
"எம்மை உலகத்தும் யாம் காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து" எனத் தெரிவிக்கிறது.
வீரன் கை தழுவும் வாளின் கூர்மையைக் காட்டிலும் அறிஞன் கை தழுவும் எழுதுகோலின் கூர்மை வல்லமை படைத்தது என்ற மாநபி (ஸல்) அவர்களின் மணிமொழி நமது சிந்தனைக்குரியது.
தமிழ்நாட்டில் இத்தகைய சிறப்பு மிக்க கல்வியின் வளர்ச்சி பற்றி எண்ணும் போது, நம் மனக்கண் முன் நிழலாகுபவர் கர்மவீரர் காமராஜர் என்று சொன்னால் அதை மறுப்பார் யாருமில்லை. இன்றைய தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையில் தமிழக மக்களால் குறிப்பாக முதியவர்களால் அடிக்கடி நினைவு கூறப்படுவராக காமராஜர் இருக்கிறார். 1954 ம் ஆண்டு தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட காமராஜர் தன்னுடைய ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு துறைகளின் வளர்சிக்கு வித்திட்டார்.
தமிழகம் அவரது ஆட்சியில் மின்துறையில் வியத்தகு சாதனை கண்டது. தமிழகத்தின் சின்னஞ்சிறு கிராமங்களிலும் மின்வசதி அளிக்கப்பட்டது. வேளாண்மைத் தொழில் விருத்தியடைந்தது. பல நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டன. கிராமங்களில் குடிநீர் வசதிகள் பெருகின. எளிய மக்கள் வீடு கட்டிக்கொள்ள திட்டங்கள் உருவாயின. மாநிலம் முழுவதும் பல புதிய சாலைகள் தோன்றின. ஏராளமான மருத்துவமனைகள் ஏற்பட்டன. மக்களின் நல்வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தன.
"கேடில் விழுச்செல்வம் கல்வி" என்ற திருக்குறள் கருத்தை நன்குணர்ந்த காமராஜர் அவர்கள் மற்றெல்லாத் துறைகளைக் காட்டிலும் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் செலுத்தத் தொடங்கினார். கல்வி வளர்ச்சிக்காகப் பல திட்டங்களை வகுத்தார். தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன.பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் அறிமுகமாகியது. இந்தியா முழுவதும் அத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. பள்ளி மாணவ, மாணவிகளுக்குச் சீருடைகள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சார்ந்த மாணவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டன. எஸ்.எஸ்.எல்.சி வகுப்புவளாயில் கல்வி இலவசமாயிற்று. மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது. இலட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகள் கல்விக்கூடங்களுக்கு செல்ல இலவசக் கல்வி வழி வகுத்தது. தமிழகம் முழுவதும் பல தொழில் நுட்பப் பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் பள்ளிகள் இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாயிற்று. இவ்வாறு காமராஜர் ஆட்சியில் கல்வி பொது உடைமை ஆயிற்று. மக்கள் அவரைக் "கல்விக் கண் திறந்த காமராஜர்" என அன்போடு அழைத்து மகிழ்ந்தனர்.
காமராஜர் உயர்கல்வி கற்றவர் அல்லர். ஆனால் அவரிடம் இருந்த நாட்டுப்பற்று, தன்னலமின்மை, அஞ்சாமை, எளிமை, கடுமையான உழைப்பு, நேர்மை, கொள்கையில் உறுதி, தொண்டு மனப்பான்மை ஆகியவற்றால் அவ்வாற இமயம் என உயர்ந்தார். காந்தியடிகளின் எளிமை, ஜவஹர்லால் நேருவின் தியாகம், வல்லபாய் படேலின் மன உறுதி அவருக்கு இருந்தன.
காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்ற புதிதில் அவருடைய படிப்பின்மையைச் சுட்டிக்காட்டி இவரால் எப்படி ஆட்சி நடத்த முடியும் எனக்கேள்வி எழுப்பியவர்கள் உண்டு. ஆனால் அவரது ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த நிர்வாகத் திறமை கொண்டு மாநிலம் எனப் பெயர் எடுத்தது. பிற மாநிலத்தைச் சேர்ந்த முதலமைச்சர்களும், அமைச்சர்களும் தமிழகத்துக்கு வந்து தமிழ்நாட்டின் வளர்ச்சியைக்கண்டு வியந்து பாராட்டினார்கள். அப்போதைய பாரதப்பிரதமர் நேரு அவர்கள் மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் போதெல்லாம், " தமிழ்நாட்டுக்குச் சென்று பாருங்கள், அங்கே காமராஜர் எட்டே எட்டு அமைச்சர்களை வைத்துக்கொண்டு எத்தகைய சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் என்பது உங்களுக்குத் தெரியவரும்" எனப் பாராட்டி பேசுவாராம்.
இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சி காரணமாகக் கண்டறியப்பட்ட கணினி மற்றும் இணையதளம் மூலம் நிகழ்த்தப்படுகின் அதிசயங்களை நாம் கண்டு வருகிறோம். கணினி அறிவு இல்லாதவன் கற்றவனல்லன் என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. உலகின் இந்தச் சவாலை நம் தமிழக மாணவர்களும் எதிர்கொண்டு கணினித்துறையில் சிறப்புற்று விளங்குகின்றனர். உள்நாட்டில் மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட தமிழக இளைஞர்கள் கணினித்துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருவது கண்டு உலகமே வியந்துப் பாராட்டுகிறது. இந்நிலையை தமிழக இளைஞர்கள் அடைவதற்குக் காரணம் 60 ஆண்டுகளுக்கு முன் கர்மவீரர் காமராஜர் போட்ட விதைதான் என்று சொன்னால், அதை மறுப்பார் எவரேனும் உண்டோ?
எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் ( ஓய்வு )
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.
பள்ளிக்கூடத்துல, இலவசக் கல்வி அறிவிச்ச பின்னால, ஏன், உன் மகனை, அங்க அனுப்பாம, வேலை செய்ய வைக்கிறாய்,'' என்றார் கர்மவீரர் காமராஜர் . சிறுவனின் தந்தை, ''பள்ளிக்கூடத்துல, இலவசக் கல்வி இருக்குன்னு எனக்கும் தெரியும் சாமி. இங்க வேல செஞ்சா, நெலத்தோட முதலாளி, மதிய சாப்பாடு குடுத்துருவாரு. பள்ளிக்கூடத்துக்கு அனுப்புனா, மதிய சாப்பாடு கிடைக்காதே சாமி,'' என்றார். உடனடியாக, பொதுக்கூட்டத்தை ரத்து செய்து விட்டு, அலுவலகம் சென்ற காமராஜர், ''மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தினால், ஏராளமான குழந்தைகள், பள்ளிக்கு வருவார்கள். இதற்கு எவ்வளவு செலவாகும்,'' என்றார். அப்போதிருந்த நிதியமைச்சரோ, ''இதற்கு ஒரு கோடி ரூபாய் செலவாகும்,'' என்றார். ''தமிழகம் முழுவதும், கல்வி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யுங்கள்; அங்கே நான் பங்கேற்று, இதற்கான நிதியை வசூலிக்கிறேன்,'' என்று சொல்லி, ஒரு கோடி ரூபாயை காமராஜர் வசூலித்து, கொண்டு வந்தது தான், இலவச மதிய உணவு திட்டம்.
ReplyDeleteதமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெற்ற மனிதராக வாழ்ந்து காட்டியவர்.