.

Pages

Friday, September 5, 2014

தொலைக்காட்சி அடிமைகள் !

மனிதர்களை அல்லது மனுஷிகளை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நுகர்வோர் பொருள்களைப் பட்டியல் இட்டால் சாராயம், கஞ்சா, போதை ஊசிகள் , அபின், ஹெராயின் என்றெல்லாம் பல பொருட்களை சேர்க்க வேண்டி இருக்கும். அதே போல் சேவைகளைப் பட்டியலிட்டால் அதில் அலைபேசி, தொலை பேசி மற்றும் தொலைக் காட்சிகளை நாம் சேர்க்க வேண்டி இருக்கும். போதைப் பொருள்களோடு தொலைக்  காட்சிப் நிகழச்சிகளையும் இணைத்துப் பேசும் நிலை ஏற்பட்டிருப்பது இன்றைய மனித குலத்துக்கு ஏற்பட்டுள்ள துரதிஷ்டமே.

தொலைக் காட்சிப் பெட்டிகளின் முன் சுருண்டு போய் கிடக்கும் மனிதர்களை இன்று வீடு தோறும் இரவு என்றும்  பகல் என்றும் பாகுபாடு இல்லாமல்  எல்லா நேரங்களிலும் நாம் காண முடிகிறது. இவர்களை ஆங்கிலத்தில் Couch Potatoes – ‘ஓய்ந்து கிடக்கும் உருளைக் கிழங்குகள்’  என்று அழைக்கிறார்கள்.
தொலைக் காட்சிப் பெட்டிகள் நவீன அறிவியல் கண்டுபிடிப்பின் அதிசயம் என்று வாதம் எடுத்து வைப்பவர்கள், தொலைக் காட்சிப் பெட்டிகள் கல்வியைப் பரப்புகின்றன; அறிவை விருத்தி அடையச் செய்கின்றன; உலகின் ஒரு கோடியில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது  என்றெல்லாம் வாதங்களை  எடுத்து அடுக்கி  வைக்கிறார்கள். ஆனால் இப்படி அறிவு விருத்திக்காக தொலைக் காட்சிகளை பயன்படுத்தும் மக்களின் சதவீதத்தைக் கணக்கிட்டால் அது மிகவும் குறைவுதான். வீணான காரியங்களுக்குப் பயன்படுத்துவோரின் சதவீதமோ ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகம்.

ஒரு நாளைக்கு ஐந்து திரைப்படங்கள் , ஒன்பது மெகா தொடர்கள் , ஒன்றுக்கும் உதவாத நகைச்சுவைகளுக்காக தனி அலைவரிசைகள் , இசை நிகழ்ச்சிகளுக்காகவும் திரைப்பாடல்களுக்காக்கவுமான  தனித்தனி அலைவரிசைகள் விளையாட்டுப் போட்டிகளுக்கான நேரலைகள் ஆகிய மனிதனை முடக்கிப் போடும் அலைவரிசைகளில் நாள் முழுதும் மூழ்கி , உருப்படியான காரியங்கள் எதையும் செய்யாமலும் உழைத்துப் பொருள் தேட வெளியில் செல்லாமலும் இருக்கச்செய்கின்றன தொலைக் காட்சிப் பெட்டிகள். இப்படிப்பட்ட நிலைமைகள் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை இல்லவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் கூட இந்த அளவுக்கு இருக்குமா என்பதும் சந்தேகம்தான்.

தொலைக் காட்சிப் பெட்டிகளை வரவேற்பறையில் வந்து அமர்ந்து இருக்கும் ஷைத்தானின் பிரதிநிதி என்று கூறலாம்.

போதைக்கு அடிமையான மனிதன்,  அதைத்தேடி ஓடுவது போல் தொலைக் காட்சி தொடர்களுக்கு அடிமையான மனிதர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வெறும் தொடரைக் காண வேண்டுமென்பதற்காகவே தங்களது அவசிய வேலைகளை வாழ்வாதரப் பணிகளிக் கூட ஒத்திவைத்துவிட்டு வீட்டுக்கு ஓடி வருகிறார்கள்.

பெண்களோ, தங்களின் உடன் பிறந்த அல்லது குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்படும் உடல் நலக் குறைவு அல்லது குடும்பப் பிரச்னைகளைப் பற்றிக் கூட இப்படி விவாதிப்பார்களா என்று சொல்ல முடியாத அளவுக்கு தொலைக் காட்சி தொடர்களில் வரும் சம்பவங்களைப் பற்றி அலசி ஆராய்கிறார்கள். அபிப்பிராயங்கள் சொல்கிறார்கள். அந்தக்கதைகளில் வரும் பாத்திரங்களுக்காக பரிதாபப்படுகிறார்கள்; கண்ணீர் கூட வடிக்கிறார்கள். இந்தக்கதை இப்படிப் போகும் அப்படிப் போகுமென்று ஆரூடங்கள் கணிக்கிறார்கள். அந்தக் கதைகளில் வில்லனாக நடிப்பவர்களை சபிக்கிறார்கள். கடைகளுக்குப் போனால் சீக்கிரம் சாமான்களைத் தாருங்கள் வாணி ராணி வரும் நேரம் ஆகிவிட்டது என்று வரிந்து கட்டிக் கொண்டு ஓடுகிறார்கள்.

தொழுகையின் நேரங்களை அறிந்து வைத்து இருக்கிறார்களோ இல்லையோ மெகா சீரியல்கள் ஒளிபரப்பாகும் நேரங்களை அறிந்து வைத்து இருக்கிறார்கள். இப்போதெல்லாம் வீடுகளில் மெட்டி ஒலி முடிந்தால்தான் ரொட்டி ஒலி கேட்கிறது என்று   பட்டி மன்றத்தில் ஒருவர் பேசினார். இது வேடிக்கையல்ல யதார்த்தம்.

இப்படி மக்கள் தொலைக் காட்சிக்கு அடிமைகளாக ஆகிவிட்டார்கள். திரைப்பட போதை , சாராய போதை போன்றவை மக்கள் அவை இருக்கும் இடங்களுக்குச் சென்று ஏற்றிக் கொள்ளும் போதைகளாகும்  . ஆனால் தொலைக் காட்சி போதை தங்களது வீடுகளில் இருந்தபடியே  மக்கள் ஏற்றிக் கொள்ளும் போதையாகும். இந்த போதையை உட்கொள்ள தலைமுறை இடைவெளியெல்லாம் இல்லை. குழந்தைகள் வரை கூடி இருந்து  அவர்களின் வயதுக்கு காணக்கூடாத காட்சிகளை எல்லாம் காண்கிற நிலமையாக இருக்கிறது.

பல வீடுகளில் உணவுத்தட்டைப் பார்த்து உணவு உண்ணும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது; தொலைக் காட்சி பெட்டியைப் பார்த்துக் கொண்டே உணவை உண்பதால் தாங்கள் உண்ணும் உணவில் பள்ளியின் எச்சம் கிடந்தாலும், பூச்சிகளும் புழுக்களும் கிடந்தாலும் கல்லும் மண்ணும் கிடந்தாலும் கூட அவற்றைக் களைந்துவிட்டு உண்ணும் முறை மாறுபட்டுப் போய்விட்டது. கணவனும் மனைவியும் குழந்தைகளும் உறவினர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் பேசும் பழக்கம் அற்றுப் போய் தொலைக் காட்சிப் பெட்டியைப் பார்த்துக் கொண்டே  பேசும் பழக்கம் மிகுந்து விட்டது. இதனால் ஒருவர் சொல்வதை மற்றவர் கவனத்தில் ஏற்றாமல் அந்தக் காலத்தில் ஒரு கதை சொல்வார்களே இன்னும் வால் மட்டும் நுழையவில்லை என்று அதே போல ஆகிவிட்டது பலரின் வாழ்க்கை.

உலகமயம், தாராளமயத்தின் காரணமாக தொலைக் காட்சிகளில் வரும் விளம்பரங்கள் இட்டுக் கட்டும் விளம்பரப் பொய்களை மக்கள் நம்பி பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பர யுக்திகளில் தங்களின் பொருளாதாரத்தை வீணாக்கி இழந்து வருகிறார்கள். தொலைக் காட்சிகளில் கடைகளை விரித்து வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏணிப்படியிலிருந்து தலைக்குத் தேய்க்கும் எண்ணெய்வரை ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை தொலைக்காட்சி மூலம் ஆர்டர் செய்ய வைத்து போலியான பொருள்களை பெரும் தொகைக்கு தலையில் கட்டிவிடுகிறார்கள்.

நடு இரவுகளில் பாலுணர்வைத் தூண்டும் காட்சிகளையும் பாடல்களையும் ஒளிபரப்பி ஒழுக்கக் கேட்டுக்கு வழிவகுக்கின்றன தொலைக் காட்சிகள். இவற்றின் விளம்பர ஸ்லாட்டுகள் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவும் மதுவுக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபடவும் பல லேகியங்களையும் சூரணங்களையும் மூலிகை மருந்துகளையும் ஆயின்ட்மெண்டுகளையும் சிபாரிசு செய்து அலைபேசி மூலம் ஆர்டர் பெற்று விற்கிறார்கள். இவைகள் அனைத்துமே போலியானவை என்பதுடன் அரசின் சோதனை போன்றவைகள் நடத்தப்பட்டு மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கப்படாத அங்கீகாரம் அற்றவையுமாகும்.

ஒரு வேடிக்கையான செய்தியை அண்மையில் படித்தோம். மனிதர்கள் நெட்டையாக வளர உதவும் என்று விளம்பரம் செய்து ஒரு லேகியத்தை விற்றார்களாம். அதை நம்பி வாங்கி சாப்பிட்ட சிலர் நெட்டையாக வளர்வதற்கு பதில்  மேலும் குட்டையாகப் போய்க் கொண்டு இருந்தார்களாம். என்னதான் நடக்கிறது என்று விசாரித்துப் பார்த்ததில் விளம்பரத்தில் கு என்ற எழுத்துக்கு பதிலாக தவறாக நெ என்று போட்டுவிட்டதால் குட்டையாக ஆவதற்கு என்பதற்கு பதிலாக நெட்டையாக என்று விளம்பரப்படுத்தப்பட்டு விட்டதாம். இதன் விளைவாக எதிர்மறையான வளர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று வேடிக்கையாக போட்டிருந்தார்கள். இத்தகைய விளம்பரங்கள் தொலைக் காட்சிகளில் மக்கள் விரும்பி லயித்துப் பார்க்கும் தொடர்களுக்கு இடையே வருவதால் மக்கள் அவற்றின் உண்மைத் தன்மைகளை உற்று நோக்கி பரிசோதித்து வாங்கும் மனநிலையை மறந்து விடுகிறார்கள்.

ஆகவே தொலைக் காட்சிகளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் உணரவேண்டும். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்காக எதை எதையோ தியாகம் செய்கிறார்கள். இந்த குடி கெடுக்கும் தொலைக் காட்சித் தொடர்களையும் தியாகம் செய்யுங்கள். கண் போன்ற நேரத்தை கனவு காண வைக்கும் தொலைக் காட்சிகளில் தொலைக்காதீர்கள். இப்படி நேரத்தை பொய்யில் தொலைத்து விட்டால் பிறகு வாழ்வின் உண்மைகளை சந்திக்கும் போது நம்மால் ஒன்றுமே இயலாமல் போய்விடும் என்பதை உணர்வோமாக !

4 comments:

  1. அதிக நேரம் "டிவி' பார்க்கும் குழந்தைகளுக்கு மாரடைப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

    தொ(ல்)லைகாட்சியை தவிர்ப்போம் !

    சிறந்த வெள்ளித் தலையங்கம் !

    ReplyDelete
  2. அருமையான பதிவு, தொலைக் காட்சிகளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் உணரவேண்டும்.. தொ(ல்)லைகாட்சியை தவிர்ப்போம் !

    ReplyDelete
  3. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு தொலைகாட்சி ஒருவகை போதைப் பொருளாகவே ஆகிவிட்டது.இதிலிருந்து மீழ்வது என்பது மிகக்கடினம் தான் தொலைக்காட்சியில் தேவையான செய்திகளை யாரும் பார்ப்பதில்லை. தேவையற்ற அனாச்சாரங்களையே அதிகம்பேர் விரும்பிப்பார்க்கிறார்கள். என்பது தான் வேதனைக்குரியது.மக்கள் உணர்வார்களா..?

    ReplyDelete
  4. பயன்படுத்துபவரைப் பொறுத்து ஒரு பொருள் போதையாகவும் போய்விடும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டானப் படைப்பு.

    //நேரத்தை பொய்யில் தொலைத்து விட்டால் பிறகு வாழ்வின் உண்மைகளை சந்திக்கும் போது நம்மால் ஒன்றுமே இயலாமல் போய்விடும் என்பதை உணர்வோமாக !//

    உண்மையே.

    இது ஒரு தரமானக் கட்டுரை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.