.

Pages

Sunday, September 7, 2014

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் 'அதிரை நிருபர்' வலைத்தளம் இணைந்து நடத்திய ஆசிரியர் தின விழா !

இன்று [ 05-09-2013 ] மாலை 4.30 மணியளவில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் 'அதிரை நிருபர்' வலைத்தளம் இணைந்து நடத்திய ஆசிரியர் தினம் மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழா நிகழ்ச்சி பள்ளியின் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மகபூப் அலி தலைமை வகித்து விழாவை சிறப்பாக வழி நடத்தி சென்றார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சித்தாதிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. கோவி. தாமரைச்செல்வன் சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவை உரையாற்றி அனைவரையும் அசத்தினார்.

அதிரையின் பிரபல எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் தனது வாழ்த்துரையில் பள்ளியில் புதிதாக அரங்கு ஒன்றை ஏற்படுத்தவும், அடுத்த ஆண்டின் ஆசிரியர் தின விழாவை அந்த அரங்கில் சிறப்பாக நடத்த வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தினார். இந்த பணிக்காக கல்வியாளர்களை  தான் இணைத்துக்கொண்டு முழு வீச்சில் ஈடுபடப்போவதாகவும் கூறினார். இதை தொடர்ந்து வாழ்த்துரை வழங்க வந்த கல்வியாளர் 'நாவலர்' நூர் முஹம்மது அவர்கள் 'கல்வி தினம்' குறித்தும் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதின் அவசியம் குறித்தும் அழகாக விளக்கினார். தனது பேச்சில் மாணவர்கள் தினமும் புத்தகம் படிப்பது அவசியம் என்பதையும் கூறினார்.

பள்ளியின் வளாகத்தில் புதிதாக போர்வெல் அமைத்திட அதிரையின் பிரபல தொழில் அதிபர் எவர் கோல்டு செல்வம் அவர்கள் வழங்கிய ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையை அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், திமுக நகர செயலாளர் இராம்.குணசேகரன், அதிரை நகர காங்கிரஸ் தலைவர் MMS அப்துல் கரீம் ஆகியோர் இணைந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மகபூப் அலி அவர்களிடம் ஒப்படைத்தனர்.

பள்ளியின் சார்பில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை நிகழ்த்திய மாணவர்கள் அனைவரும் மேடைக்கு அழைத்து பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். பள்ளியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரிய பெருமக்கள் SKM ஹாஜா முகைதீன், முஹம்மது அலியார், முஹம்மது ஹனிபா, வாவன்னா சார், சண்முகம், சீனி வாசன், ராமசந்திரன் ரோசம்மாள், ஹாஜி முஹம்மது ஆகியோருக்கு எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்களால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.

இதையடுத்து அதிரை நிருபர் வலைத்தளம் சார்பில் பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட சிறப்பு பரிசை பள்ளியில் பணி புரியும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. பரிசை கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் ஆலோசகரான A.S. அப்துல் காதர் வழங்கினார்.

முன்னதாக வந்திருந்த அனைவரையும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முதுகலை தமிழ் ஆசிரியர் அஜ்முதீன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளியின் தமிழ் ஆசிரியர் உமர் பாருக் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கி இறுதியில் நன்றியுரையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊர் பிரமுகர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியப் பெருமக்கள், பள்ளியின் ஆசிரிய ஆசிரியைகள்  - அலுவலக பணியாளர்கள் - மாணவர்கள் - பெற்றோர்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவரையும் பள்ளியின் ஆசிரிய ஆசிரியைப் பெருமக்கள் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

செய்தி மற்றும் படங்கள் :
நூர் முஹம்மது ( நூவன்னா )











8 comments:

  1. வாழ்த்துகள்!! புகைப்படம் அருமையாக உள்ளது . நன்றி!!
    நூர் முஹம்மது ( நூவன்னா )!

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    அதிரையில் இயங்கும் எல்லா வலைதள நண்பர்களையும் அழைத்து ‎இருக்கலாம். மேலும் பழைய முதுமை மாணவர்களுக்கு அழைப்பு ‎கொடுத்து இருக்கலாம்.‎

    இன்ஷா அல்லாஹ், மீண்டும் இப்படியொரு நாளில் இன்னும் சிறப்பாக ‎சிறக்கலாம்.‎

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. தம்பி கோ. மு. அ. ஜமால் முஹம்மது அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்.

    இந்த நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு அதிரை நிருபர் வலைதளத்தில் வெளியிடப்பட்டு அனைத்து வலைதளப் பதிவர்களுக்கும் அழைப்பும் விடப்பட்டு இருந்தது.

    அந்த முறையில்தான் அதிரை நியூஸ் நண்பர்களும் தம்பி நூவன்னா அவர்களும் வந்திருந்து சிறப்பித்து இந்தப் பதிவையும் தந்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

    தனிப்பட்ட முறையில் அழைக்காதது தவறு என்றால் அது என் தவறுதான். இனி வரும் வருடங்களில் அந்தத் தவறுகள் களையப்படுமென்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இப்ராஹீம் அன்சாரி காக்கா, உங்கள் பதிலுக்கு நன்றி. இன்ஷா அல்லாஹ் அப்படியே நடக்கட்டும்.

      இரண்டாவதாக மற்ற சகோதர இணையத் தளங்களையும் சரியாக பார்க்காதது என்னுடைய குற்றமே என்று நான் ஏற்றுக் கொள்கிறேன்.

      Delete
  4. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், மொழிப்பாடங்களில் பின்தங்கி இருப்பதாக, கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ஆசிரியர் அனைவரும், புதிய பாணியில், புதிய யுக்தியில் பாடம் நடத்த வேண்டும். வெறும் கல்வியை கற்பிப்பது மட்டும் ஆசிரியர் பணி கிடையாது; அதைத் தாண்டி, வாழ்க்கை கல்வியை, மாணவர்களுக்கு போதிக்க வேண்டும். மாணவர்களிடையே, மனிதாபிமானத்தை, நல்ல பண்புகளை, ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும்.

    எம் ஆசிரியர் பெருமக்களை இவ்விழாவில் பார்ப்பது ரொம்ப சந்தோசம் அவர்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நமது கா. மு. மேல் நிலைப் பள்ளியில் படித்து இன்று பொருளாதாரத்தில் உயர்ந்து நின்றாலும் படித்த பள்ளியை மறக்காமல் பள்ளியின் குடிநீர் தேவைக்காக பொருப்பெடுத்து முதல் கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவிய திரு. பழஞ்சூர் செல்வம் அவர்களை நாம் பாராட்ட வேண்டும்.

    ஒரு முஸ்லிம் அறக்கட்டளை சார்பாக நடப்படும் பள்ளியில் படிப்பவர்கள் பெரும்பான்மையினர் பிற மதத்ததினர் என்பது இன்றைய நிலையில் ஒரு மகிழ்வான விஷயம். அதே போல
    திரு. செல்வம், அண்ணா சிங்காரவேலு போன்றோர்களின் பாகுபாடு இல்லாத பங்களிப்பும் பாராட்டத்தக்கது.

    ReplyDelete
  6. பழஞ்சூர் செல்வம் அவர்களின் செயல் பாராட்டபட வேண்டிய ஒன்று. இன்னும் பள்ளியைதரம் உயர்த்தி மாணவர்களுக்கு ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த ஊர் புரவலர்கள் முன்வந்து பள்ளி நிர்வாகத்தோடு இணைந்து தரம் உயர்த்த வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.