.

Pages

Wednesday, November 14, 2018

குழந்தைகளைக் கொண்டாடுவோம் ~ குழந்தைகள் தின சிறப்பு பதிவு!

அதிரை நியூஸ்: நவ.14
இன்று (நவ.14) புதன்கிழமை. இந்தியத் திருநாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள். இந்நாள் ஒவ்வோராண்டும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நேரு அவர்களுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அதனால் தனது பிறந்த நாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடும்படிப் பணித்தார். இந்நாளில் குழந்தைகளின் குணாதிசயம் பற்றியும், அவர்களுக்கான உரிமைகள் பற்றியும், அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சமூக அக்கறை பற்றியும் விரித்துரைக்க விரும்புகிறேன்.

"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று"

என்பது இளமையில் என்றோ கேட்ட திரை இசைப் பாடல். குற்றங்களை மறந்து மன்னிக்கும் குழந்தைகளின் குணத்தைத் தென்னெனத் தெரிவிக்கிறது. இப்பாடல். குழந்தைகள் அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்வதும், அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் கரம் கோர்த்து விளையாடுவதும் நாம் அன்றாடம் காணும் காட்சிகள் தானே. இத்தகைய உயர் குணம் பெரியவர்களிடமும் இருந்தால் உலகில் சண்டை ஏது? பகை ஏது?

குழந்தைகளுக்கென சில உரிமைகள் உண்டு. அவற்றை அவர்களுக்குத் தராமல் குழந்தை உரிமை மீறல்கள் ஆங்காங்கே நடைபெறுவது குறித்து வருந்த வேண்டியுள்ளது.

பொதுவாக குழந்தையும், சேட்டையும் கூடப்பிறந்த இரட்டைப் பிறவிகள் எனலாம். பள்ளி செல்லும் வயதில் சேட்டைகள் சற்று அதிகம் இருக்கும். பள்ளி விடுமுறை நாட்களில் அவர்களின் கொண்டாட்டமும், குதூகலமும் கேட்கத் தேவையில்லை. சில நேரங்களில் குழந்தைகளின் கொண்டாட்டம் பெற்றோர்களுக்குத் திண்டாட்டமாகத் தோன்றலாம். இதனால் அவர்களுக்கு உண்டாகும் கோபம் காரணமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் குழந்தைகள் தண்டனைக்குள்ளாவதும் உண்டு.

அண்மையில் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் நம்மை அதிர்ச்சியுறச் செய்தன. தனக்குப் பிறந்ததல்ல என்ற சந்தேகத்தால் தந்தையே தன் குழந்தையை கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளான். தாய்ப்பால் ஊட்ட விரும்பாத தாயே தன் குழந்தையைக் கொன்றிருக்கிறாள். இருண்ட காலம் எனக் கூறப்படும் அன்றைய நாளில் அரபகத்தில் பெண் குழந்தை பிறந்தால் அதைக் கொன்றழிக்கும் நிலை இருந்ததைக் நாம் அறிந்திருக்கிறோம். அத்தகைய கொடுஞ்செயல் இன்றைய நவீனக் காலத்தில் நிகழ்வது வியப்பையும், வேதனையையும் அளிக்கிறது.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் உரிமை பல வழிகளில் மீறப்படுகிறது. மாறிவரும் வாழ்க்கை முறையில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக உள்ளனர். அவர்கள் வீடு திரும்பும் போது குழந்தைகள் தூங்கிவிடுகின்றனர். காலையில் பெற்றோர் அவசர அவசரமாகப் பணிக்குப் புறப்படுவதிலும், குழந்தைகளை அவசரக் கோலத்தில் தயார்படுத்திப் பள்ளிக்கு அனுப்புவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். இதனால், பெற்றோர் - குழந்தைகளுக்குமான இடைவெளி அதிகரித்து விடுகிறது. குழந்தைகளிடம் சிறிதுநேரம் பேசுவதற்குக்கூடப் பெற்றோர்களால் நேரம் ஒதுக்க முடிவதில்லை.

கிடைக்கிற விடுமுறை நாட்களிலாவது பெற்றோர்கள் குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசலாம்; குழந்தைகளின் பள்ளிச் சூழல், அவர்களுடைய நண்பர்கள், வகுப்பில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்கள் போன்றவற்றைக் கேட்டறியலாம். இது குழந்தைகளுக்கு உற்சாகத்தையும் மன மகிழ்ச்சியையும் தரலாம். இதற்கெல்லாம் இக்காலப் பெற்றோர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது. தொலைக்காட்சித் தொடரிலும், கைப்பேசி அழைப்பிலும் பொழுது போய்விடுகிறதே.

விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு ஒரு குதுகலமான அனுபவம். அதற்கு நேரம் ஒத்துக்கித்தர முடியாத அளவுக்கு டியூசன் கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ், மியூஸிக் கிளாஸ் என்றெல்லாம் குழந்தைகளின் வயதுக்கு மீறியவற்றையெல்லாம் திணித்து அவர்களைப் பெற்றோர்கள் பாடாய்படுத்துகிறார்கள்.

பெண் குழந்தைகள் பற்றி சமீப காலங்ககளில் ஊடகங்கள் மூலம் அறிய வரும் செய்திகள் நம்மை பதைப்பதைக்கச் செய்கின்றன. 6-வயது, 3-வயது குழந்தைகளெல்லாம் கூடப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாவதை அறிய நேரும் போது அதிர்ச்சிக்குள்ளாகிறோம்.

இக்கொடுமைகளுக்கெல்லாம் தீர்வுதான் என்ன? நாம் வாழும் சமூகமும் நம்மை ஆளும் அரசும் இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். பொறுப்பிலுள்ளவர்கள் தகுந்த வழிகாண வேண்டும். இக்கொடுமைகளுக்கெல்லாம் முடிவு கட்டவேண்டும்.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.       

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.