.

Pages

Tuesday, November 13, 2018

நெருங்கி வரும் கஜா புயல் ! அதிரையர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

அதிரை நியூஸ்: நவ.13
இது ரெட் அலர்ட் அல்ல மாறாக முன்னெச்சரிக்கைகான வேண்டுகோள் மட்டுமே. இதையே நமது அருகாமை ஊர்களுக்குமான பொது வேண்டுகோளாகவும் கருத வேண்டுகிறேன்.

வங்கக்கடலில் சுமார் 800 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ள கஜா என்று பெயரிடப்பட்டுள்ள புயல் எதிர்வரும் 15 ஆம் தேதி காலையிலிருந்து நன்பகலுக்குள் கடலூர் மற்றும் வேதராண்யத்திற்கு இடையே மணிக்கு 60 முதல் 80 கி.மீ வேகம் எனும் வலுவிழந்த நிலையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 100 கி.மீயாக இருக்கலாம் எனவும் வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கஜா புயலால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்;க்கப்படுவதால் நமதூரிலும் ஓரளவு காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையில் பிலால் நகர் பகுதியே வெள்ளத்தில் மிதந்தது நினைவில் இருக்கலாம், பாதிக்கப்பட்ட பிலால் நகர் மக்கள் அப்போது கட்டப்பட்டு வந்த காதிர் முகைதீன் கல்லூரியின் பெண்கள் ஹாஸ்டலில் தங்க வைக்கப்பட்டு சில வேளைகள் உணவளிக்கப்பட்டும் ஆதரிக்கப்பட்டனர் மேலும் அதிரையின் இதர பகுதிகளில் சுமார் 3 தினங்களுக்கு மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டதால்; குடிநீர் இன்றி கஷ்டப்பட்டதும், இளைஞர்களின் சிலரின் முயற்சியால் டீசல் ஜெனரேட்டர் மின்சாரம் மூலம் பள்ளிவாசல்களிலிருந்து குடிநீர் இறைத்து வழங்கப்பட்டதும் நினைவிலிருக்கலாம்.

இந்த கஜா புயலால் எந்த சேதமும் யாருக்கும் விளைந்துவிடக்கூடாது என ஏகன் அல்லாஹ்விடம் கையேந்தி இறைஞ்சுவோம். இறைநாட்டப்படியே கடும் காற்றும் மழையும் பெய்து முன்புபோல் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தாலோ அல்லது மின்சாரத் தடை ஏற்பட்டாலோ அல்லது குடிநீர் மற்றும் உணவுப் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ அதை சமாளித்திடும் வகை முன்னேற்பாடுகளுடன் இருப்பதும் நம் கடமையே.

14 ஆம் தேதியே 2, 3 தினங்களுக்குத் தேவையான போதிய குடிநீர் மற்றும் உணவை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள், மெழுகுவர்த்திகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், குழந்தைகளுக்கான உணவுகளை தயார்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள், குழந்தைகளை மழை நீரிலும் தேங்கிக் கிடக்கும் நீரிலும் விளையாட விடாதீர்கள், களிமண் சுவர்  மற்றும் பழைய சுவர்களுடன் உள்ள வீடுகளில் தங்கியிருப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள். பொதுவாகவே மழைக்காலங்களில் மின்கசிவு இருக்கும் என்பதால் மின்சாரம் துண்டிக்கப்படாது இருக்கும் நேரங்களில் சுவிட்சுகள் மற்றும் மின்சாதனங்களை மிக ஜாக்கிரதையாக கையாளவும்.
வெள்ளநீர் சூழக்கூடிய பிலால் நகர், எம்எஸ்எம் நகர் போன்ற தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே ஊருக்கு உட்பகுதியில் உள்ள உங்களுடைய உறவினர்கள், நண்பர்களின் வீட்டிற்குச் சென்றுவிடுவது நல்லது அல்லது உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருப்பது உசிதம்.

அதிரைவாழ் சமூக ஆர்வலர்கள் புயல் மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருங்கள், குழந்தைகள் உணவு உள்ளிட்ட அவசர உணவுகள் எங்கு கிடைக்கும் என்பதை முன்கூட்டியே உறுதி செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் நேரத்தில் ஜெனரேட்டர்களை இயக்கத் தேவையான டீசல் ஏற்பாடுகள் மற்றும் மக்கள் தங்குவதற்கான மாற்றிட ஏற்பாடுகளை செய்து தர தயாராக இருங்கள் என அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

ஒருவேளை இறைநாட்டப்படி மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட நேர்ந்தால் வழமைபோல் வெளிநாடுவாழ் சகோதரர்கள் களத்தில் நிற்கும் சமூக ஆர்வலர்களின் வழியாக தேவையான உதவிகளை வழங்க உங்கள் கரங்கள் தாமதமின்றி முன்வர வேண்டும்.

முக்கியமாக, கஜா புயலால் வரும் மழைநீர் மற்றும் அதனைத் தொடர்ந்து உருவாக உள்ளதாக வெதர்மேன் கூறும் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலையால் பொழியலாம் என எதிர்பார்க்கப்படும் மழைநீர் நமதூர் குளங்களை நிரப்ப அந்தந்தப் பகுதி இளைஞர்களே முன்வர வேண்டும், நீரை திருப்ப சில மண்வெட்டிகளே தேவை!

அன்புடன் உங்களில் ஒருவன்
அதிரை அமீன்

படங்கள்: இந்து தமிழ் திசை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.