.

Pages

Tuesday, July 30, 2019

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி? (முழு விவரம்)

தஞ்சாவூர், ஜூலை 30
சிறுபான்மையினர் இன மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்து அரசு. அரசு உதவி பெறும் மற்றும் மைய-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2019-20 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி. பாலிடெக்னிக், செவிலியர்/ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.

2019-20 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 135127 மாணவ, மாணவியர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மைய அரசால் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வி உதவித்தொகை மாணவ மாணவியர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும், பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ மாணவியர்கள் 15-10-2019 வரையிலும் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் 31-10-2019 வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவ மாணவியர்கள் அனைவரும் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும், ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி நிலையத்திற்கு அனுப்பாத மாணவ மாணவியர்களின் இணையதள விண்ணப்பங்கள் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

இணையதளத்தில் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கவனமுடன் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் எந்த நிலையிலும் மாற்றவோ திருத்தவோ இயலாது, மாணவ மாணவியரின் ஆதாரர் எண்கள் விண்ணப்பங்களை பரிசீலணை செய்யும் அலுவலர்களுக்கு இணையதளத்தால் பகிரப்படமாட்டாது.

கல்வி நிலையங்கள் ஆன்லைன் மு்லம் பெறப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சான்றாவணங்களுடன் பரிசீலித்து தகுதி பெற்ற விண்ணப்பங்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்படவேண்டும்.

பள்ளிகள்-கல்வி நிலையங்கள், மைய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் (NSP) புதிய கல்வி நிலையங்களை இணைப்பதற்கு DISE/AISHE/NCVT குறியீட்டு எண் அவசியமாகும், புதிய கல்வி நிலையங்கள் NSP இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் (Nodal Officer) விவரங்களை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் இரு நகல்களில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும், கல்வி நிலையங்களின் பாடப்பிரிவில் மாற்றம் இருப்பின் உடன் திருத்தம் செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ மாணவியர்கள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய DISE/AISHE குறியீட்டு எண்ணை மாணவ மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான / இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள் மற்றும் இதர நிபந்தணைகள் அடங்கிய விரிவான விபரங்கள் http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes minorities.htm. என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், இத்திட்டம் தொடர்பான மைய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.  என இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

5 ஆண்டு தடையுள்ள உள்நாட்டினர் மீண்டும் ஹஜ் செய்ய அரிய வாய்ப்பு!

அதிரை நியூஸ்: ஜூலை 30
பொதுவாக ஒருமுறை ஹஜ் செய்த எவரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஹஜ் செய்ய இடைக்கால தடை விதிக்கப்படும், மீண்டும் ஹஜ் செய்ய 5 ஆண்டுகள் கழிந்திருக்க வேண்டும் என்பது உள்நாட்டினர், வெளிநாட்டினர் ஆகியோருக்கான பொதுவிதியாகும்.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பை தலைமையகத்தின் தேசிய தகவல் மையம் ஒரு புதிய மின்னணு போர்ட்டல் ஒன்றை உள்துறை மற்றும் ஹஜ், உம்ரா அமைச்சகங்களுக்காக உருவாக்கித் தந்துள்ளது.

இந்த ஆன்லைன் போர்ட்டல் வழியாக விண்ணப்பித்து 5 ஆண்டு ஹஜ் தடையுள்ள சவுதியர்கள் மற்றும் சவுதிவாழ் வெளிநாட்டினர் ஒரு சிறப்பு அனுமதியின் கீழ் மீண்டும் ஹஜ் செய்யலாம் என அறிவித்துள்ளது.

5 ஆண்டு தடையுள்ளவர்கள் 'மஹ்ரம்' தேவையுடைய அம்மா, சகோதரி, மனைவி, மகள் போன்றவர்களுடன் இணைந்தும் இறந்த இரத்த உறவுகளுக்காகவும் ஹஜ் செய்யலாம், இதற்காக 5 ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை.

மேலும்,
ஒரு தந்தை இறந்துவிட்ட தன் மகன், மகளுக்காக,

ஒரு சகோதரன் இறந்துவிட்ட தன் சகோதர, சகோதரிக்காக,

ஒரு மகன் இறந்துவிட்ட தன் தாய் தந்தையருக்காகவும் ஹஜ் செய்ய விண்ணப்பித்து ஹஜ் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி சவுதிவாழ் அனைத்து உள்நாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கும் பொருந்தும், வெளிநாடுவாழ் மக்களுக்கு இந்த வசதி இன்னும் விரிவுபடுத்தப்படவில்லை.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

மரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 31)

அதிரை நியூஸ்: ஜூலை 30
அதிராம்பட்டினம், நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ சேக் அப்துல் காதர், நெ.மு.அ ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோரின் பேரனும், ஜெ.பஜால் அகமது அவர்களின் மகனும், முகமது சரீப் அவர்களின் மருமகனும், ஜெய்னுல் ஹுசைன், பயாஸ் அகமது ஆகியோரின் சகோதரருமாகிய பைசல் அகமது (வயது 31) அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (30-07-2019) இரவு 8.45 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

ஹஜ் யாத்ரீகர்கள் உதவிக்காக 10 க்கு மேற்பட்ட உலக மொழிகள் பேசும் அதிகாரிகள்!

அதிரை நியூஸ்: ஜூலை 30
ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவுவதற்காக 10க்கு மேற்பட்ட மொழிகள் பேசும் சவுதி அதிகாரிகள்

புனித ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக உலகெங்கிலும் இருந்து அல்லாஹ்வின் விருந்தினர்கள் வருகை தருகின்றனர். இந்த ஹஜ் யாத்ரீகர்களுடன் உரையாடி அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யவும் சவுதி அரேபியாவின் ஜவாஜத் துறை (இமிக்கிரேசன்) 10க்கு மேற்பட்ட உலக மொழிகளில் உரையாடும் ஜவாஜத் அதிகாரிகளை நியமித்துள்ளது.

ஜவாஜத் துறையால் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு ஜித்தா மற்றும் மதினா விமான நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ள இந்த அதிகாரிகள் ஆங்கிலம், ஸ்பானிஷ், இந்தோனேஷியன் (மலாய்), ஜப்பானீஷ், பார்ஸி, உருது, துருக்கி உள்ளிட்ட 10 க்கு மேற்பட்ட உலக மொழிகளில் பயணிகளுடன் பேசி உதவி வருகின்றனர்.

எந்த அதிகாரி என்ன மொழியில் பேசி உதவுவார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இவர்கள் நெஞ்சில் பட்டியை அணிந்திருப்பார்கள், சம்பந்தப்பட்ட மொழியை பேசும் மக்கள் தாங்கள் மொழியை பேசும் அதிகாரியை எளிதாக அடையாளங்கண்டு பேசி உதவிகளை பெற முடியும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

மரண அறிவிப்பு ~ முகமது தம்பி (வயது 72)

அதிரை நியூஸ்: ஜூலை 30
அதிராம்பட்டினம், கீழத்தெரு பாட்டன் வீட்டு குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் செய்யது கனி அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது மதீனா மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் டீ கடை முகமது சாலிகு, பாதுஷா ஆகியோரின் சகோதரரும், செய்யது கனி, நிஜாமுதீன், சேக் நசுருதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய முகமது தம்பி (வயது 72) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (30-07-2019) பகல் லுஹர் தொழுகைக்கு  பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Monday, July 29, 2019

சவுதியில் ஹஜ் பெர்மிட் இல்லாதவர்களை ஏற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு தண்டனை!

அதிரை நியூஸ்: ஜூலை 29
சவுதியில் நடப்பு ஹஜ் காலத்தின் போது உரிய ஹஜ் பெர்மிட் இல்லாமல் மக்கா எல்லைக்குள் நுழைவதை பாதுகாப்பு படையினர் கடும் சோதனைகள் மூலம் தடுப்பார்கள் என்றும் ஹஜ் பெர்மிட் இல்லாதவர்களை ஏற்றிவரும் வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

1. முதன்முதலாக பிடிபடும் வாகன ஓட்டிகளுக்கு 15 நாட்கள் சிறைவாசம்.

2. இரண்டாம் முறையாக பிடிபடுபவர்களுக்கு 2 மாதம் சிறை மற்றும் 25,000 ரியால்கள் அபராதம்.

3. மூன்றாம் முறை பிடிபடுபவர்களுக்கு 50,000 ரியால்கள் அபராதம்.

4. பிடிபடும் வாகன ஓட்டிகள் வெளினாட்டினராக இருந்தால் சிறை தண்டனைக்குப் பின் நாடு கடத்தப்படுவர். மேலும் சவுதிக்குள் மீண்டும் உள்நுழைய சட்டத்தில் குறிப்பிட்டு காலத்திற்கு தடை விதிக்கப்படும்.

5. பிடிபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு சிறுபடுத்தப்படுவர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

சவுதி மன்னர் விருந்தினராக ஏமன் குடும்பத்தார் 2,000 பேருக்கு ஹஜ் ஏற்பாடு!

அதிரை நியூஸ்: ஜூலை 29
நடப்பு ஹஜ்ஜில் சவுதி மன்னரின் தனிப்பட்ட செலவின் கீழ் பல்வேறு நாட்டவர்களுக்கும் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவது அறிந்ததே.

மன்னரின் விருந்தினர்கள் என்ற இத்திட்டத்தின் கீழ் தற்போது 2,000 ஏமன் தேசத்தவர்கள் ஹஜ் செய்திட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் உயிர்நீத்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பொதுமக்களின் குடும்பத்தினர் என 2,000 பேர் ஹஜ் செய்திட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சவுதியின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான அமைச்சகம் முன்னின்று செய்து வருகின்றது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

சவுதியில் ஹஜ் பயணிகளின் வருகை 1 மில்லியனை தாண்டியது!

அதிரை நியூஸ்: ஜூலை 29
நடப்பு ஹஜ் காலத்தில் திங்கட்கிழமை வரை மொத்தம் 1,084,762 ஹஜ் யாத்ரீகர்கள் சவுதியின் பல்வேறு வகையான நுழைவாயில்கள் மூலம் உட்பிரவேசித்துள்ளனர்.

விமானம் மூலம் 1,020,562 பேரும், தரைவழி 53,842 பேரும், கடல் மார்க்கமாக 10,358 பேரும் உள்வந்துள்ளனர்.

துல்காயிதா பிறை 1 முதல் 25 வரை 329 விமானங்கள் மூலம் மக்கா ரூட் இனிஷியேட்டிவ் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்த வருகை 132,126 இவர்களில் ஜித்தா வழியாக 81,583 மதினா வழியாக 50,354 பேர் உள்வந்துள்ளனர்.

இதுவரை மதினாவில் வந்திறங்கிய ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 663,162 என சவுதி பாஸ்போர்ட் துறையினரால் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

அதிராம்பட்டினத்தில் மகப்பேறு மருத்துவர் டாக்டர் கெளசல்யா ராணி அரசுப் பணி நிறைவு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை.29
அரசு மகப்பேறு மருத்துவராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர் டாக்டர். கெளசல்யா ராணி. இவர், அரசு மருத்துவப் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், இவரது மருத்துவச் சேவையைப் பாராட்டி, பணி நிறைவு பாராட்டு விழா அதிராம்பட்டினத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ.அன்பழகன் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக, அதிராம்பட்டினம் மருத்துவர்கள் டாக்டர் ஹக்கீம், டாக்டர் எஸ். ஹாஜா முகைதீன், டாக்டர் எச்.இர்ஷத் நஸ்ரின், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் சீனிவாசன், டாக்டர் கார்த்திகேயன், டாக்டர் ஷெரீன் பேகம், டாக்டர் ஷர்மிளா, டாக்டர் கலைவாணி, பட்டுக்கோட்டை மருத்துவர்கள் டாக்டர் கண்ணன், டாக்டர் நியாஸ் அகமது, டாக்டர் நியூட்டன், டாக்டர் ராஜகோபால், டாக்டர் சங்கரவடிவேல், டாக்டர் சதாசிவம், டாக்டர் பாஸ்கரன்,டாக்டர் சுப்ரமணியன், டாக்டர் தேவி ராஜேந்திரன், டாக்டர் மகாலிங்கம், டாக்டர் விஜயலட்சுமி, டாக்டர் செளந்தர்ராஜன், டாக்டர் அறிவானந்தம், டாக்டர் பந்மாநந்தன், டாக்டர் புகழேந்தி, டாக்டர் அருண்குமார், டாக்டர் பிரசன்னா, டாக்டர் கலைச்செல்வம், டாக்டர் மருதுதுரை, டாக்டர் சங்கிதா உட்பட அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை செவிலியர்கள், லேப் பணியாளர்கள், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
 
 
 
 
 
 
 

அதிராம்பட்டினத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கொடி ஏற்றி வைப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 29
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் கோட்டூரார் என்.கமாலுதீன் நினைவு கொடியேற்றம், கல்வெட்டு திறப்பு விழா அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என்.காளிதாஸ் தலைமை வகித்தார். விழாவில், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கலந்துகொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை எழுச்சி முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்துப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.அ பாரதி, ஒன்றியச் செயலாளர்ஏ.எம் மார்க்ஸ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சி.பக்கரி சாமி, ஏ.ஐ.ஓய், எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், அதிரை பேரூர் துணைச்செயலாளர் எம்.எல்.ஏ ஹசன், ஏ.எச் பசீர் அகமது, எம். முகமது இக்பால் உள்ளிட்ட அக்கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.
 

மரண அறிவிப்பு ~ ஹலீமா அம்மாள் (வயது 75)

அதிரை நியூஸ்: ஜூலை 29
அதிராம்பட்டினம், நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெய்னா சம்சுதீன்  அவர்களின் மகளும், த.அ முகமது அபூபக்கர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் பத்ருதீன், மர்ஹூம் அப்துல் கபூர், சுல்தான் இப்ராஹீம் ஆகியோரின் சகோதரியும், அன்வர், அபுல் ஹசன், அனஸ், ஜமால் ஆகியோரின் தாயாரும், இன்ஜினியர் ஹலீமுத்தீன், பேராசிரியர் மவ்லவி. எம்.ஏ முஹம்மது இத்ரீஸ் ஆகியோரின் பெரிய தாயாரும், அஸ்ரப், சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாருமாகிய  ஹலீமா அம்மாள் (வயது 75) அவர்கள் இன்று அதிகாலை சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (29-07-2019) பகல் லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Sunday, July 28, 2019

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் நடத்திய பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 28
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில், காமராஜர் 117-வது பிறந்த தின விழா சிறப்பு பேச்சுப் போட்டி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஜூலை 28) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் சேக்கனா எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம். முகமது முகைதீன், முன்னாள் தலைவர் என்.ஆறுமுகச்சாமி, இணைச் செயலாளர் எம். முகமது அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 'ஏழைகளின் கல்விக்கண் திறந்த காமராஜர்', 'காமராஜர் காண விழைந்த இந்தியா', தூய்மை, எளிமை, நேர்மை, கொள்கைப்பிடிப்பு இவற்றில் மொத்த உருவமே காமராஜர்' ஆகிய தலைப்புகளின் கீழ், கீழோர் பிரிவில் 6,7,8,9 ஆகிய வகுப்புகளுக்கும், மேலோர் பிரிவில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டன.

போட்டியை லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தொடங்கி வைத்துப் பேசினார். இதில், அதிராம்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளிகள், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 23 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் எஸ்.பி கணபதி  காமராஜரின் சாதனைகள், தொண்டு குறித்துப் பேசினார்.

போட்டி நடுவர்களாக, பேராசிரியர் எம். ஏ முகமது அப்துல் காதர், பள்ளி ஆசிரியைகள் எம். தயாநிதி, ஆர். உஷா ஆகியோர் பொறுப்பேற்று நடத்தினர்.

போட்டி முடிவில், கீழோர் பிரிவில், மாணவர்கள் கே.விஷாலினி, பி.வீரமணி, எஸ். திவ்யதர்ஷினி ஆகியோரும், மேலோர் பிரிவில், அ.அருள்தேவி, சு.பஹ்மியா, அ.முகேஷ் ஆகியோரும் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். இவர்களுக்கு நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளரக கலந்துகொண்ட சமூக ஆர்வலர் எஸ்.ஏ இம்தியாஸ் அகமது பரிசினை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். முடிவில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கச் செயலாளர் எம்.நிஜாமுதீன் நன்றி கூறினார்.

விழாவில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.