அண்மைக் காலத்தில், நமது மக்களிடையே பணமே பிரதானம் என்கிற எண்ணம் வளர ஆரம்பித்துவிட்டது. எப்படியும் பாடுபட்டு பணத்தை சேர்த்துவிட்டால் போதும் நமக்கு வாழ்வின் எல்லா இன்பங்களும் நம்மைத் தேடி வந்துவிடுமென்று நம்பிக் கொண்டு இருக்கிறோம்.
உண்மையில் நம்மிடம் இருக்கும் பணத்தின் அளவுக்கும் நமது மனம் அடையும் மகிழ்ச்சியின் அளவுக்கும் தொடர்பே இல்லை என்பதுதான் யதார்த்தம். பல கோடீஸ்வரர்கள் பணத்தை வைக்க இடமின்றி வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் உடல் நலம் கருதி கேழ்வரகுக் கஞ்சியைத் தவிர வேறு எதுவும் குடிக்கக் கூடாது என்பது மருத்துவர் அவருக்கு விதித்த விதி. அப்படியானால் பணம் அவருக்கு எல்லாவற்றையும் அனுபவிக்கும் நிலையைத் தராதது ஏன் ?
பணம் அதிகம் வைத்திருப்பவர்களிடம்தான் ஒழுக்கக் குறைவுகள் அதிகம் என்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. தெருச்சண்டையிலிருந்து ஈவ் டீசிங்க் வரை ஜாமீனில் வெளிவந்தவர்களின் வழக்குப் பதிவுகளைப் பார்த்தால் அவர்கள் பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளாகத்தான் இருக்கிறார்கள். சாலை விதிகளை மீறுபவர்களில் பணக்காரர்களின் சதவீதமே அதிகம். அதே போல் மதுப் பழக்கம் உள்ளவர்கள் முதல் குடிபோதையில் கற்பழிப்பு முதலிய அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களும் பணம் படைத்தவர்களே. பணம் அத்துமீறலையும் ஆசையையும் தூண்டுகிறது.
பணத்தை சேர்த்து அதன் பயன்படுத்தி துய்த்தவர்கள் இன்னும் பணம் சேர்க்க வேண்டுமென்ற ஆவலில் சட்டங்களை மீறுகிறார்கள்; சட்டங்களை வளைக்க பணத்தையே பயன்படுத்துகிறார்கள். தேவைக்கும் அதிகமான நுகர் பொருள்களை வாங்கி அதனால் உண்மையில் அந்தப் பொருள்கள் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிடுகிறார்கள். விலையையும் ஏற்றிவிடுகிறார்கள். குடியிருக்க பத்து குழி இடம் கிடைத்தால் போதும் என்று நினைக்கிற ஏழை, பணம் படைத்தவனுடன் சந்தையில் போட்டியிட முடியவில்லை. மீன் கடைகளிலிருந்து இந்தப் பிரச்னையை நாம் காண முடியும்.
பணத்தால் உணவை வாங்க முடியும்; பசியை வாங்க முடியுமா? பணத்தால் புத்தகங்களை வாங்கலாம்; சிந்தனையை வாங்க முடியுமா? மருந்துகளை வாங்கலாம்; ஆனால் உடல் நலத்தை விலை கொடுத்து வாங்கிவிட முடியுமா? மனைவிக்குப் பட்டுப் புடவை பல்லாயிரம் ரூபாயில் வாங்கிவிடலாம் ஆனால் அவளது மனதையும் அன்பையும் முழுதாக வாங்கிவிட முடியுமா? பல லட்சங்களை நன்கொடையாகக் கொடுத்து பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி விடலாம் ஆனால் அந்தக் கல்வியை நமது பிள்ளைகள் கற்றுக் கொள்ளும் என்று உத்திரவாதம் தர இயலுமா? ஆடம்பரமான பொருள்களை பணம் கொடுத்து வாங்கிவிடலாம் ஆனால் அதைப் பயன்படுத்துவது எப்படி என்று பணம் சொல்லித் தருமா? பல வீடுகளில் உடற்பயிற்சி எந்திரங்கள் துணியைப் போட்டு மூடிக் கிடப்பதைப் பார்க்கிறோம்.
பணம் நம்மிடம் இருந்தால் பலர் நம்மிடம் நட்பு பாராட்டி வருவார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் நமக்கு உயிர் காக்கும் தோழனாக இருப்பார்கள் என்று உத்திரவாதம் உண்டா ? பணம் நம்மைவிட்டுப் போய்விட்டால் செத்த மாட்டில் உன்னி இறங்குவது போல் இறங்கிப் போய்விடும் நண்பர்கள் நாட்டில் இல்லையா?
பணம் படைத்தவர்களை முகஸ்துதிக்காகப் பாராட்டும் பலர் அவரை விட்டுப் பணம் போய்விட்டால் முகத்தைத் திருப்பிக் கொண்டு நடப்பதை நாம் கண்டதில்லையா ? பணம் உண்மையான மரியாதையை பெற்றுத் தருகிறதா அல்லது போலி மரியாதையைப் பெற்றுத் தருகிறதா?
கட்டுக் கட்டாக பணத்தை வைத்துக் கொண்டு கப்பலில் போனவன் , அவன் போன கப்பல் கடலில் மூழ்கிவிட நீந்த வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அவன் வைத்திருக்கும் பணம் ஒரு குவளை கடல் நீரை நல்ல நீராக மாற்றித்தந்து அவனுடைய தாகத்தை தீர்க்குமா?
பணம் நமக்கு ஒரு கருவியாக இருக்கும் வரை நிம்மதி. ஆனால் பணத்தின் கையில் நாம் கருவியாகிவிட்டால் நிம்மதி நம்மைவிட்டுப் பறந்துவிடும்.
பறந்து பறந்து பணம் தேடி
பாவக்குளத்தில் நீராடி
பிறந்து வந்த நாள் முதலாய்
பேராசையுடன் உறவாடி – என்று ஒரு பழைய பாடல் உண்டு.
பணம் பேராசையை மேலும் மேலும் வளர்க்கிறது. எவ்வளவு பணம் வந்தாலும் சிலருக்கு இல்லை என்ற பல்லவிதான். காரணம் ஆசைதான்.
ஆகவேதான் தனது தேவைக்கு மேல் தன்னிடம் இருக்கும் பணத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்யும்படி எல்லா மதங்களும் சொல்கின்றன. குறிப்பாக பெருமானார் நபி ( ஸல் ) அவர்கள், “ உண்மையில் நமது செல்வம் என்பது நாம் உண்டு முடித்த உணவு; உடுத்திக் கழித்த உடைகள்; நாம் செய்த தர்மம் ஆகியவைதான். இவை போக மற்றவை எல்லாம் அடுத்தவருக்கு சொந்தமாகக் கூடியது “ என்று கூறினார்கள்.
ஒரு முறை போருக்காக நிதி திரட்டிக் கொண்டிருக்கும் போது தன்னிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் கொண்டுவந்து பெருமானார் ( ஸல் ) அவர்களிடம் கொடுத்தார்கள் ஹஜரத் அபூபக்கர் ( ரலி) அவர்கள். . உமக்காகவும் உமது பிள்ளைகளுக்காகவும் என்ன மிச்சம் வைத்திருக்கிறீர்கள் என்று பெருமானார் ( ஸல் ) அவர்கள் வினவிய போது , அல்லாஹ்வையும் அவனது இரசூலையும் விட்டு வந்திருக்கிறேன் என்று கூறினார்கள். செல்வம் தராத சிறப்பை இந்த வார்த்தைகள் அவருக்குத் தந்தன.
பணத்தை ஒரு பொருட்டாகக் கருதி வாழாத பல அரசியல் தலைவர்களை நாம் கண்டு இருக்கிறோம். காமராஜர் இறந்த போது அவரது சட்டைப் பையில் இருநூறு ரூபாய் கூட இல்லை; அண்ணாத்துரை அவர்கள் மறைந்த போது அவரது குடும்பத்துக்காக எதையும் விட்டுச் செல்லவில்லை; கக்கன் என்கிற ஒரு காவல் துறை அமைச்சராக இருந்தவர் பதவியை இழந்ததும் கால்கடுக்க நின்று, பொதுப் பேருந்தில் பயணம் செய்தார்; அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் பெற்றுக் கொண்டார்; எம்ஜியார் தான் தேடிய சொத்துக்களை செவிட்டு ஊமை பள்ளிக்கு எழுதி வைத்தார்; பண்டித ஜவர்ஹர்லால் நேருவின் அப்பா மோதிலால் நேரு தனது ஆனந்த பவனம் என்ற வீட்டை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மகாத்மா காந்தியோ இரண்டு துண்டுகளால் தனது மானத்தை மறைத்து எளிமையாக வாழ்ந்தார். இன்றோ அரசியல் தலைவர்கள் கோடிகளில் குளிக்கிறார்கள். கோடிகளைக் குவித்ததாக நீதிமன்றங்களில் பல வழக்குகள் எல்லா அரசியல் தலைவர்கள் மீதும் கட்சி சார்பின்றி நடைபெற்று வருகின்றன. இன்று அரசியல் அதிகாரத்தில் இருந்தாலும் நாளை இந்த அதிகாரங்களும் புகழும் நிலைக்க வேண்டுமானால் பணத்தின் மீதுள்ள ஆசையை முதலில் விடவேண்டுமென்று இவர்கள் உணரவேண்டும். .
பணம் நிரந்தரமானதல்ல என்பதை உணர்ந்து நற்செயல்களைச் செய்து நல்லவர்களாக வாழப் பழகுவோமா ?
கல்லூரி : ஆலிம் முகமது சாலிக் என்ஜினீயரிங் கல்லூரி
ReplyDeleteஇடம் : ஆவடி, சென்னை
நாள் : 17-01-2012
இளம் வயதிலே நிறைய பணம் சம்பாதிப்பதால் அதிகம் விளைவது நன்மையா !? தீமையா !? என்ற தலைப்பில் சூடான விவாதம் நடைபெற்றது.
இதில்...
நாணயத்திற்கு இருபக்கம் போல் கை நிறைய சம்பாதிக்கும் இளைஞர்களுக்கும் இரு பக்கங்கள் அவர்கள் கையில் இருக்கும் பணத்தால் ஒரு பக்கம் நன்மை விளைகிறது மறுபக்கம் தீமை விளைகிறது. அது இளைஞர்களுக்கே புரிந்து விட்டது.
ReplyDeleteஅதனால் இளம் வயதிலே பணம் நிறைய சம்பாதிப்பதால் அதிகம் விளைவது நன்மையா ? தீமையா ? என்று என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகளிடேயே நடந்த விவாதத்தில் ( பட்டி மன்றம் ) அக்கல்லூரியின் செயலாளர் ஜனாப். எஸ். சேக் ஜமாலுதீன் அவர்கள் நடுவராக இருந்து தனது இறுதி உரையில்......
பணம் இன்றைய மனித வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது. பணம் எல்லோருக்கும் தேவைப்படுவதால் ஒவ்வொருவரும் சம்பாதிக்க வேண்டியது அவசியமாகிறது. இன்றைய இளைய தலைமுறையினரில் ஒரு பகுதியினர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அதிகம் சம்பாதிப்பது தப்பில்லை. அது அவர்களது திறமை, அதிர்ஷ்டத்தை பொறுத்த விஷயம்.
ReplyDeleteபணம் நிறைய நல்லது செய்கிறது. பணம் இருந்தால்தான் நம்மால் அடுத்தவர்களுக்கு கொடுத்து நல்லது செய்யமுடியும். பணத்தால் விளையும் நன்மைகளை பட்டியல் போடத் தொடங்கினால் அது வெகு நீளமாகும். அதுபோல் பணத்தால் உருவாக்கும் தீமைகளும் இருக்கின்றன. ஆனால் நாம் இங்கு “ அதிகம் விளைவது.... “ என்ற வார்த்தையை சேர்த்திருக்கிறோம். அதனால் அதிகம் எது விளைகிறது ? என்று ஆராய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
முன்பு ஒருவர் சம்பாதித்து ஒரு குடும்பமே நடந்தது. ஒரு வீட்டில் ஒரே ஒரு பாத்ரூம்தான் இருந்தது. ஒரே ஒரு டி.வி. தான் இருந்தது. ஆனால் அந்த வீட்டில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒன்றாக இருந்தார்கள். ஒன்றாக சாப்பிட்டர்கள். நன்றாக இருந்தார்கள்.
இன்று ஒரு வீட்டில் இரண்டு, மூன்று பேர் சம்பாதிக்கிறார்கள், வீட்டிற்கு இரண்டு, மூன்று பாத்ரூம்கள். இரண்டு, மூன்று டி.வி.க்கள். சவுகரியங்கள் என்று நினைத்து மனிதர்கள் தனித்தனியாக பிரிந்தார்கள். பின்பு அந்த வீட்டில் உள்ளவர்களிடம் தனித்தனியாக அதிக பணம் சேர்ந்ததே அந்த பிரிவுக்கு காரணம்.
ReplyDeleteஇளம் வயதிலே நிறைய சம்பாதிக்கும் இளைஞர்கள், அந்த பணத்தால் எதை எல்லாம் அனுபவிக்க முடியும் என்று கணக்கு போடுகிறார்கள். அவர்களுக்கு நேற்றை பற்றிக் கவலை இல்லை. நாளையை பற்றிய நினைப்பும் இல்லை. இன்றுதான் என் கையில் இருக்கிறது அதை முடிந்த அளவு சுவையாக அனுபவித்துவிட வேண்டும் என்று அலைபாய்கிறார்கள்.
உணவில், வீடு உணவின் ஆரோக்கியத்தை மறந்து தினமும் சுவைக்கு பாஸ்ட் புட் சாப்பிடுகிறார்கள். அது அவர்கள் உடலை குண்டாக்கி, பாஸ்ட்டாக அவர்கள் வாழ்கையை முடிக்கப் பார்க்கிறது தேவையற்ற பொழுதுபோக்குகள் அவர்கள் உடலை கெடுக்கிறது. முறையற்ற வாழ்க்கை அவர்களிடம் குற்ற உணர்வை ஏற்படுத்தி, மன உளைச்சலை உருவாக்கிறது. அதனால் பலர் நாற்பது வயதுக்கு முன்பே நடை பிணம்போல் ஆகிவிடுகிறார்கள்.
அதிகமாக சம்பாதிக்கும் இளைஞர்கள் “ நான் ஒரு மாதத்தில் சம்பாதிப்பதை என் தந்தை ஒரு வருடம் சம்பாதிக்கிறார் “ என்று கர்வத்துடன் பேசுகிறார்கள். அதனால் குடும்பத்தில் சுயமரியாதை இழப்பும், தவிப்பும், பிரிவும் உருவாகிறது. இது குடும்பத்தில் ஏற்படும் தீமை.
ReplyDeleteசமூகத்தை கணக்கிட்டு பார்த்தல், அதிக பணம் படைத்தவர்கள் – பணம் இல்லாதவர்கள் என்ற இடைவெளி தற்போது அதிகமாகிறது. பணம் படைத்தவர்கள் மென்மேலும் பணம் சேர்த்து கொண்டாடுகிறார்கள். பணம் இல்லாதவர்கள் மென்மேலும் ஏழையாகி திண்டாடுகிறார்கள். பணம் படைத்தவர்களின் கொண்டாட்டங்களையும், சவுகரியங்களையும் பார்த்து பணமற்றவர்கள் ஏங்குகிறார்கள். இந்த ஏக்கங்கள் சமூக பிரச்சனைகளை உருவாக்கிறது.
பணம் ஒரு தரப்பினரிடம் குவியும்போது அங்கே மனித தரம் குறைகிறது பணத்தால் விளையும் தீமைக்கு பல முகங்கள் இருக்கின்றன. அதனை நாம் தினமும் ஊடகங்கள் வாயிலாக காண்கிறோம். அந்த அடிப்படையில், “ இளம் வயதில் நிறைய சம்பாதிப்பதால் அதிகம் விளைவது தீமையே ! “ என்று கூறுகிறேன். மேலும் இத்தீமையை குறைக்க இளைய தலைமுறைகளால் முடியும். அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு, நன்மைகள் அதிகரிக்க பாடுபட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் இவ்விவாதத்தை ( பட்டி மன்றம்) முடித்துவைக்கிறேன்.
பிஸ்மில்லாஹ்ஹிற்றஹ்மான்னிற்றஹீம்
ReplyDeleteمَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ ۜ
“என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! 69:28
ஸஹீஹுல் புகாரி 1036. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கல்வி பறிக்கப்படும் வரை பூகம்பங்கள் அதிகமாகும் வரை - காலம் சுருங்கும் வரை - குழப்பங்கள் தோன்றும் வரை - கொலை செய்தல் அதிகமாகும் வரை- உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை - கியாம நாள் ஏற்படாது." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume:1,Book:15.
ஸஹீஹுல் புகாரி 1403. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்" 'நானே உன்னுடைய புதையல்" என்று கூறும்." இதைக் கூறிவிட்டு, 'அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்." என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume:2,Book:24.
ஸஹீஹுல் புகாரி 1412. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை மறுமை நாள் ஏற்படாது. எந்தளவுக்கெனில் அந்நாளில் பொருளுடையவன் தன்னுடைய தர்மத்தை யார்தான் வாங்கப் போகிறார் என்று கவலை கொள்வான். மேலும், யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால் அவன் எனக்குத் தேவையில்லை என்று கூறுவான்." அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume:2,Book:24.
وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُّطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِّن كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ
மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான். 16:112
பணம் நமது இவ்வுலக வாழ்க்கைக்கு அவசியமானதே.! மறுப்பதற்கில்லை.. ஆனால் பணத்தால் அனைத்தையும் ஒருபோதும் வாங்கி விட முடியாது. பணத்தைக் கொண்டு ஏற்ப்படும் நட்பும் உறவும் புகழும்,,மரியாதையும் நிலையானது அல்ல.எந்த நேரமும் நமக்கு எதிராக செயல்பட நேரும். அடுத்து சொல்வதானால் சிலருடைய நிலைமை வானுயர செல்வமிருந்தும் வயிறு நிறைய சாப்பிடக் கூடாதென மருத்துவரின் அறிவுரை ஆகவே அவர்களிடம் கோடிக் கோடியாய் பணமிருந்தும் தனது வயிறு நிரம்ப சாப்பிட முடியாத நிலைமை சிலர் மூட்டை மூட்டையாய் பணமிருந்தும் பிச்சைக் காரன் வேடத்தில் வாழ்வது தையும் சரியாக அனுபவிக்காமல் வடிகட்டிய கஞ்சனாக எந்த ஒரு தான தர்மங்களும் செய்யாமல் யாருக்கும் புண்ணிய மில்லாமல் இருப்பது. இப்படி வளவகையாகச் சொல்லலாம்
ReplyDeleteமொத்தத்தில் பணத்தைக் கொண்டு அனைத்தையும் பெற்று விட முடியாது.
ரூ.3000 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது - (தலைப்புச் செய்தி)
ReplyDeleteபல கோடி மோசடியில் ஈடுபட்ட அரசியல்வாதி பதவி விலகக் கோரிக்கை - இது 5 பக்கத்தில் ஒரு ஓரத்தில் உள்ள செய்தி
இது நேற்று நாளிதழில் வந்தது.. இதுக்கு மேல் நான் விளக்க வேண்டுமா?
பணம் பத்தும் செய்யும்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅனைத்துக்கும் மூல காரணமாக இருப்பது பணம்தான். அது வேறு ஒன்றும் இல்லை, வடிவம், உருவம், வண்ணம் இவைகளால் ஆனதுதான் பணம்.
பணம் பத்தும் செய்யும், அது பாதாள வரைக்கும் போகும் என்பார்கள்.
பணத்தின் வரலாறு, பணம் பிறந்த விதம், பணம் எப்படி உருவானது இப்படி அலசி பார்க்க வேண்டும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் பொருட்செல்வங்களும் மக்கட் செல்வங்களும் அல்லாஹ்வின் நினைவிலிருந்து உங்களை திசை திருப்பிவிட வேண்டாம். திருமறை. ( 63:9-10 )
ReplyDeleteஉங்கள் பொருட் செல்வங்களும் உங்கள் மக்கட்செல்வங்க்களும் ( உங்களுக்கு) ஒரு சோதனையாகும். அல்லாஹ்வாகிய அவனிடமே மகத்தான பிரதிபலன் உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் ( அல் அன்பால் அத்தியாயம் 8: 28 )
அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடுமென்று நான் அஞ்சவில்லை. மாறாக , உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு உலக செல்வம் கொடுக்கப்பட்டதுபோல் உங்களுக்கும் கொடுக்கப்பட்டு அவர்கள் அதற்காக போட்டி இட்டதுபோல் நீங்களும் போட்டி இட அது அவர்களை அழித்துவிட்டது போல் உங்களையும் அழித்துவிடுமோ என்றுதான் அஞ்சுகிறேன் .
ReplyDeleteபுகாரியில் மிஸ்வர் பின் மகரம் ( ரலி) அவர்கள் அறிவித்ததாக வந்துள்ள ஹதீஸ் .
நான் எழுதியுள்ள
" இஸ்லாமிய பொருளாதாரச் சிந்தனைகள்- அதிரை நிருபர் வெளியிட்டுள்ள கட்டுரைத் தொகுப்பில் எடுத்தாளப்பட்டுள்ளது.
முயற்சி செய்யும் போது வெற்றியும் அதோடு பணமும் சேர்ந்து வருகிறது, பணத்தை கட்டுபடுத்த தெரிந்தால் நிம்மதி நம்மளை விட்டு போகாது.
ReplyDeleteபணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியுமா ?
ReplyDeleteஇதற்கு பதிலே...
“ மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலே “ என்ற ஆரம்பம். அதன் விரிவே கட்டுரை. நல்லத் தரமானக் கட்டுரை.
கட்டுரையில் உச்சமான ஒன்று // ஒரு முறை போருக்காக நிதி திரட்டிக் கொண்டிருக்கும் போது தன்னிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் கொண்டுவந்து பெருமானார் ( ஸல் ) அவர்களிடம் கொடுத்தார்கள் ஹஜரத் அபூபக்கர் ( ரலி) அவர்கள். . உமக்காகவும் உமது பிள்ளைகளுக்காகவும் என்ன மிச்சம் வைத்திருக்கிறீர்கள் என்று பெருமானார் ( ஸல் ) அவர்கள் வினவிய போது , அல்லாஹ்வையும் அவனது இரசூலையும் விட்டு வந்திருக்கிறேன் என்று கூறினார்கள். செல்வம் தராத சிறப்பை இந்த வார்த்தைகள் அவருக்குத் தந்தன.//
இவ்வாறு யாருக்குச் சொல்ல மனம் வரும் !?
அல்லாஹ்வையும் நம் கண்மணி நாயகத்தையும் தெளிவாகத் தெரிந்தவர்களால் மட்டுமே முடியும்.
ஒருமுறை அந்தச் சூழ்நிலையை மனக்கண்முன் நிறுத்தி தன் நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கவாவுது யாருக்கும் தைரியம் வருமா ?! இதெல்லாம் முஃமினின் அடையாளம். இலகுவாக சகாபாக்களை நினைத்துவிட வேண்டாம்.
நல்ல நினைவூட்டல். வாழ்க ஆசிரியர்.