.

Pages

Monday, December 31, 2018

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.ஆண்ணாதுரை தலைமையில் இன்று (31.12.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை,  பட்டா மாற்றம், கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 650 மனுக்களை  பொது மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம்  நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.

பின்னர், குவைத் நாட்டில் பணியின் போது இறந்த பட்டுக்கோட்டை வட்டம், துவரங்குறிச்சி வடபாதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சட்டப்படியாக சேர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.22,23,432க்கான காசோலையினை அவரது மனைவி மாலதி என்பவரிடமும், சவுதி அரேபியா நாட்டில் பணியின் போது இறந்த தஞ்சாவூர் வட்டம், வண்ணாரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவருக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.74,815க்கான காசோலையினை அவரது மனைவி ராஜலெட்சுமி என்பவரிடமும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) பாலச்சந்திரன், அலுவலக மேலாளர் (குற்றவியல்) பாலசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில்  குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (31.12.2018) நடைபெற்றது

இக்கூட்டத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்ததாவது:
உலகிலேயே முதன் முறையாக இந்தியாவில் தான் குழந்தைகள்  உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் குழந்தைகள் மீதான குற்ற புகார்களின் மீது Quick Response Cell மூலம் 24 மணி நேரத்திற்குள் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.  குழந்தைகள்  மீதான குற்றங்கள் தொடர்பான புகார்களை www.ncpcr.gov.in என்ற இணைய தளத்தில் அளித்திடலாம்.  கொத்தடிமையாக மீட்கப்பட்ட சிறுவனை நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தஞ்சாவூர் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் சேர்த்து மறு வாழ்வு நடவடிக்கை மேற்கொண்டனர். சிறுவனின் குடும்பத்தினருக்கு குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் குழந்தைகள் இல்லங்களில் புகார் பெட்டிகள்  வைக்கப்பட்டு மாவட்ட குழந்தைகள் பர்துகாப்பு அலகு சிறப்பாக செயல்படுகிறது. குழந்தைகள் மீதான வன்முறை தொடர்பான வழக்குகளில் அதிக அளவில் விரைவாக தீர்ப்பு அளிக்கப்பட்ட மாவட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் இருக்கிறது. இவ்வாறு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசேகரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், குழந்தைகள் நலக்குழு தலைவர் திலகவதி மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் தடுப்பு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிகழ்த்திய இளைஞருக்கு PFI பாராட்டு!

அதிராம்பட்டினம், டிச.31
சைக்கிளில் 10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிகழ்த்திய  இளைஞருக்கு பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் காதர் முகைதீன். இவரது மகன் தப்லே ஆலம் (வயது 30). விரைவாக சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை அதிராம்பட்டினத்தில் இருந்து திருச்சி, சிதம்பரம், மயிலாடுதுறை, சேத்தியாத்தோப்பு, இராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்று திரும்பியுள்ளார். இதுவரையில், 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், இவரது சாதனையைப் பாராட்டி பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அதிரை பேரூர் தலைவர் என். முகமது புஹாரி, இன்று (டிச.31) திங்கட்கிழமை சான்றிதழ், நினைவுப்பரிசு, சீருடை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். அருகில் அவ்வமைப்பின் அதிரை பேரூர் செயற்குழு உறுப்பினர் ஏ.ஜெ  முகமது அசார், உறுப்பினர் சம்சுல் ரஹ்மான் உள்ளனர்.

மல்லிப்பட்டினத்தில் முறையாக நிவாரணம் வழங்கக்கோரி மீனவர்கள் ஆர்ப்பட்டாம் ( படங்கள்)

மல்லிபட்டினம், டிச.31-
மீனவ மக்களுக்கு புயல் நிவாரணம் முறையாக வழங்கிடக் கோரி தஞ்சை மாவட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த மல்லிப்பட்டினம் மீன்துறை ஆய்வாளர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சங்க நிர்வாகிகள் கே.குத்புதீன், பி.பெரியண்ணன், எஸ்.நிஜாமுதீன், செந்தில்குமார், நாகேந்திரன், சந்திரசேகர், முகமது அனிபா மற்றும் 20 பெண்கள் உள்ளிட்ட 200 பேர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில்,  "மீனவ குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ 10 ஆயிரம் வாழ்வாதார நிதியாக உடனடியாக வழங்க வேண்டும். சேதமடைந்த நாட்டுப் படகுகளுக்கு அரசு அறிவித்த இழப்பீட்டு தொகை ரூ 80 ஆயிரத்தை கூட்டு வங்கி கணக்கில் சேர்க்காமல் நேரடியாக மீனவர்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

பகுதி சேதமடைந்த படகுகளுக்கு அரசு அறிவித்த ரூபாய் 30 ஆயிரத்தை குறைக்காமல் வழங்கிடவேண்டும். சுனாமி வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பெட்டகம் வழங்க வேண்டும்.

மீனவக் குடும்பங்களின் அனைத்து கூட்டுறவுக் கடன், வங்கிக் கடன், கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். மீனவப் பெண்கள் வாங்கியுள்ள சுய உதவி குழு கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். பெண்களிடம் நுண்கடன் நிதி நிறுவனங்கள் அடாவடி வசூல் செய்ய அனுமதிக்கக்கூடாது. தமிழக அரசு கேட்டுள்ள ரூபாய் 15 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

தம்பிக்கோட்டை வடகாடு, மறவக்காடு, அதிராம்பட்டினம், சின்னமனை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விடுபட்ட அனைவருக்கும் சுனாமி வீடுகள் கட்டித்தரவேண்டும். மீனவத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார நிவாரண நிதியாக ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

ஷார்ஜாவில் நாளை (ஜன.1) குறிப்பிட்ட சில இடங்களில் இலவச பார்க்கிங் இல்லை!

அதிரை நியூஸ்: டிச.31
அமீரகத்தின் பொது விடுமுறை நாட்களின் போது பொதுவாக அனைத்து எமிரேட்டுகளிலும் இலவச பார்க்கிங் என அறிவிக்கப்படும் என்றாலும் அடுக்குமாடி பார்க்கிங் போன்ற சிலவைகளில் மட்டும் விதிவிலக்காக கட்டணம் செலுத்த நேரிடும் அந்த வகையில் நாளை ஜனவரி 1 அன்று ஷார்ஜாவிலும் இலவச பார்க்கிங் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட சில இடங்கள் மட்டும் தொடர்ந்து கட்டண பார்க்கிங் ஆக செயல்படும் என ஷார்ஜா முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

நாளை ஷார்ஜாவில் கட்டண பார்க்கிங் உள்ள இடங்கள்:
1. அல் ஹொஸன் ஸ்ட்ரீட்
2. கோர்னிச் ரோடு - இருபுறமும்
3. அல் சுவைஹியான்
4. கைஸ் பின் அபி ஸாசா ஸ்ட்ரீட் (பறவைகள் மார்க்கெட்), அல் ஜூபைல்
5. சென்ட்ரல் மார்க்கெட் - அல் மஜஸ் - 1
6. அல் மஜஸ் ஏரியை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும்.

தெரிந்தோ, தெரியாமலோ மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளில் கட்டணம் செலுத்தாமல் பார்க்கிங் செய்தால் அபராதம் நிச்சயம் என்றும் முனிசிபாலிட்டி அறிவுறுத்தியுள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

துபையில் உலகின் மிகப்பெரும் சூரியஒளி மின் திட்டம்!

அதிரை நியூஸ்: டிச.31
துபையில் உலகின் மிகப்பெரும் சூரியஒளி மின்திட்டத்தின் 4 ஆம் கட்டப்பணிகளின் நிலவரம்

துபையில் ஒரே இடத்தில் அமைந்துள்ள மிகப்பெரும் சூரியஒளி மின் திட்டம் என்ற சாதனையை துபை மின் வாரியம் நிகழ்த்தியுள்ளது. 50 பில்லியன் திர்ஹத்தில் அமைக்கப்பட்டு வரும் இப்பெரும் திட்டத்தின் 4 ஆம் கட்டப்பணிகள் தற்போது நடந்து வருகின்றன. எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 5,000 மெகவாட் மின் உற்பத்தி செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2 கட்ட திட்டப்பணிகள் நிறைவடைந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் 3 வது கட்டப்பணிகள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நிறைவடைந்து உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளையில் 4 வது கட்டப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன, இதிலிருந்து சுமார் 900 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்த 4வது கட்டப்பணிகளுக்கான Concentrated Solar Power (CSP) 128 தூண்களை ஊன்றும் பணி நிறைவடைந்துள்ளது.

துபையிலுள்ள இந்த பிரம்மாண்ட சூரியஒளி மின்தயாரிப்பு Parabolic basin complex, solar tower and photovoltaic panels ஆகிய 3 வகையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருவதும், இப்படி தயாரிக்கப்படும் மின்சாரத்தை 15 மணிநேரங்கள் வரை சேமித்து வைக்கவும் வசதிகள் உள்ளன. உலகின் மற்ற மின்தயாரிப்புகளோடு ஒப்பிடுகையில் இந்த சூரிய ஒளி மின்திட்டமே மிக மிக குறைவான செலவில் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

5 கி.மீ. நடைப்போட்டியில் அதிரை வழக்குரைஞர் 2-வது தடவையாக மாநில அளவில் சாதனை! (படங்கள்)

சாதனையாளர் M.M.S சகாபுதின்
அதிராம்பட்டினம், டிச.31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.எம்.எஸ் அபுல் ஹசன். இவர் மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். இவரது மகன் எம்.எம்.எஸ் சகாபுதீன் (வயது 61). வழக்குரைஞர் மற்றும் நடைபயிற்சி வீரர் ஆவார்.

இந்நிலையில், தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில், 37 வது ஆண்டு மாநில அளவிலான நடைப்போட்டி, தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி ஏ.வி.வி.எம் கல்லூரியில் டிச.29,30 ஆகிய 2 தினங்கள் நடைபெற்றது. இதில், 60-வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் எம்.எம்.எஸ் சகாபுதீன் கலந்துகொண்டு, 34 நிமிடம், 35 விநாடிகளில் 5 கி.மீ. இலக்கை எட்டி, முதல் இடம் பிடித்து 'மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்' பட்டத்தை தட்டிச்சென்றார்.

இதையடுத்து, சாதனையாளர் எம்.எம்.எஸ் சகாபுதினுக்கு, தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் தேவாரம், பதக்கம், பாராட்டுச்சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து சாதனையாளர் எம்.எம்.எஸ் சகாபுதின் கூறியது;
'கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக நடை பயிற்சியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறேன். பட்டுக்கோட்டை நடை பயிற்சியாளர் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளேன். இச்சங்கம் சார்பில், கடந்த 3 ஆண்டுகளாக நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றேன். கடந்த ஆண்டு மாநில அளவில் கரூரில் நடந்த போட்டியில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றேன். தற்போது தஞ்சாவூர் மாவட்டம், பூண்டியில் மாநில அளவில் நடந்த போட்டியில் 2-வது தடவையாக சாம்பியன் பட்டம் பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. வரும் ஆண்டு ஐதராபாத்தில் நடைபெறும் தேசிய அளவிலான நடைப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெறுவதுதான் எனது அடுத்த இலக்கு' என்றார்.
 
 
 

Sunday, December 30, 2018

65 வயதில் குழந்தை பெற்று காஷ்மீர் பெண் உலக சாதனை!

அதிரை நியூஸ்: டிச.30
இயற்கையான முறையில் 65 வயதில் கருவுற்று குழந்தை பெற்று காஷ்மீர் பெண் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

நவீன யுகத்தில் 72 வயதுடைய பெண்மணிகள் வரை குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல்கள் இருந்தாலும் அவை அனைத்தும் என்கிற செயற்கை கருவூட்டல் எனும் மருத்துவ தொழிற்நுட்பத்தின் அடிப்படையிலேயே சாத்தியமாகியுள்ளது. இந்தியப் பெண்களுக்கு மாதவிலக்கு அதிகபட்சம் 47 வயதில் நின்றுவிடும், மாதவிலக்கு நின்ற பெண்கள் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது அரிதினும் மிக அரிதான செயலாகும்.

சுமார் 50 வயதுகளில் இயற்கையான முறையில் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் உள்ள நிலையில் 65 வயதில் இந்த காஷ்மீரப் பெண்மணி ஆரோக்கியமானதொரு பெண் குழந்தையை பெற்றுள்ளது உலக சாதனையாகும் என மகப்பேறு மருத்துவர் ஷப்Pர் சித்தீகி தெரிவித்துள்ளார். இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 8 மற்றும் 10 வயதுகளில் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த பெண் குழந்தையை அல்லாஹ் தனக்கு அருளிய விலைமதிப்பற்ற பரிசு என வர்ணிக்கும் இந்த பெண்மணியின் கணவர் ஹக்கீமுத்தின் 80 வயது முதியவர் என்பதுடன் ஏற்கனவே 2 குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டு வரும் நிலையில் காஷ்மீர் மாநில அரசு தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீரில் தற்போது மத்திய பாஜக அரசின் ஏஜென்டான கவர்னர் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டில் செயற்கை கருவூட்டல் முறைப்படி இதற்கு முன் மிக தனது 66வது  வயதில் ஸ்பெயினைச் சேர்ந்த மரியா டெல் கார்மன் என்ற பெண் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்தார், இவர்களே பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் முதிய வயதில் குழந்தை பெற்ற பெண் என்ற அங்கீகாரத்திற்கு உரியவர்.

அதேபோல் 2016 ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த தல்ஜிந்தர் கவுர் என்ற 72 வயது பெண்மணி செயற்கை கருவூட்டலில் 2 முறை தோல்வியடைந்திருந்த நிலையில் 3வது முயற்சியில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அல் குர்ஆனின் கூற்றுப்படி மிகவும் முதிய வயதில் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் இறைத்தூதர் ஜக்கரியா (அலை) மற்றும்  இறைத்தூதர் இப்ராஹிம் (அலை)ஆகியோர் ஆவர்.

இறைத்தூதர் ஜக்கரியா (அலை) அவர்களுக்கு முதுமையில் குழந்தை வழங்குவது குறித்த இறைவனின் முன்னறிவிப்பு:

قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِىْ عَاقِرًا وَّقَدْ بَلَـغْتُ مِنَ الْـكِبَرِ عِتِيًّا‏ 
19:8. “என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?” எனக் கூறினார்.
19:9
قَالَ كَذٰلِكَ‌ۚ قَالَ رَبُّكَ هُوَ عَلَىَّ هَيِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَيْـٴًـــا‏ 
19:9. “(அது) அவ்வாறே (நடைபெறும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்” என்று இறைவன் கூறினான்.


இறைத்தூதர்  இப்ராஹிம்  (அலை) அவர்களுக்கு முதுமையில் குழந்தை வழங்குவது குறித்த இறைவனின் முன்னறிவிப்பு: 
 قَالُوْا لَا تَوْجَلْ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ عَلِيْمٍ‏ 
15:53. அதற்கு அவர்கள், “பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள்.
15:54
 قَالَ اَبَشَّرْتُمُوْنِىْ عَلٰٓى اَنْ مَّسَّنِىَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُوْنَ‏ 
15:54. அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?” எனக் கேட்டார்.

Source: Khaleej Times & Daily Mail
தமிழில்: நம்ம ஊரான்
 

துபையிலிருந்து லக்னோ சென்ற விமானத்தில் நிர்வாணமாக நடந்த பயணி கைது!

அதிரை நியூஸ்: டிச.30
துபையிலிருந்து உ.பி மாநிலத்தின் தலைநகர் லக்னோவிற்கு நேற்றுக்காலை சுமார் 150 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இதில் பயணித்த ஒருவன் திடீரென தனது ஆடைகளை களைந்துவிட்டு பிற விமானப் பயணிகள் முன் நிர்வாணமாக நடந்து சென்றான்.

விமானத்தின் பைலட் உத்தரவிட்டதையடுத்து விமானத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட அந்தப் பயணியை விமான சிப்பந்திகள் பிடித்து ஒரு இருக்கையோடு கட்டி வைத்தனர். நிர்வாணமாக இருந்த அவன் மீது ஒரு போர்வையை கொண்டும் போர்த்தினர்.

விமானம் பகல் 12.05 மணியளவில் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கியதை அடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மேல் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

இது இப்படி என்றால் பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் ஒரேயொரு பயணியுடன் மட்டும் பறந்துள்ளது

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ மாநிலத்தின் 'தவோவ்' (Davao) விமான நிலையத்திலிருந்து தலைநகர் மணிலாவிற்கு (Manila) ஒரெயொரு பயணியுடன் சென்றுள்ளது. விமானத்தில் ஏறிய மிஸ். லூயிசா எரிஸ்பே என்ற அந்த இளம்பெண் தன்னுடன் வேறு யாரும் பயணிக்காதது கண்டு அச்சமடைந்துள்ளார் எனினும் அந்த ஒரு பயணிக்கும் விமான ஊழியர்கள் எப்போதும் போல் உற்சாகமாக சேவையாற்றியதை தொடர்ந்து அவரும் உற்சாகமாகியுள்ளார்.

இதுகுறித்த அனுபவத்தை லூயிசா முகநூலில் பதிந்ததை தொடர்ந்து 'ஒரு பயணி' என்பதற்காக விமான சேவையை ரத்து செய்யாமல் தொடர்ந்து இயக்கிய நிர்வாகம், பைலட் மற்றும் விமான ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருவதுடன் 'தனக்காக மட்டும்' இயக்கப்பட்ட அந்த விமான பயணம் குறித்தும் வாழ்நாள் நினைவு பொக்கிஷம் எனவும் மெய்சிலிர்த்து எழுதியுள்ளார்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

குவைத்தில் தனியார்துறை ஊழியர்களுக்கும் அரசுத்துறை போல் பொது விடுமுறை அளிக்க திட்டம்!

அதிரை நியூஸ்: டிச.30
குவைத் தனியார் துறை ஊழியர்களுக்கும் அரசுத்துறை போல் பொது விடுமுறை அளிக்க உத்தேச திட்டம்

குவைத் அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடப்படும் பொது விடுமுறைகளுடன் ஒப்பிடும் போது தனியார் துறையினருக்கு கிடைக்கும் பொது விடுமுறை தினங்கள் மிகவும் குறைவு என்ற குறைபாடு நிலவுகின்றது. தனியார் நிறுவனங்களும் அதன் ஊழியர்களும் செய்து கொண்டு பணி ஒப்பந்தத்தை அனுசரித்தே விடுப்புக்கள் வழங்கப்படுகின்றன.

குவைத் அரசு வேலைவாய்ப்புகளில் சுமார் 3 ½ லட்சம் குவைத்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில் தனியார் துறையில் நிலவும் விடுமுறை தின குறைவின் காரணமாகவே சுமார் 58% குவைத்தியர்கள் தனியார் நிறுவன பணிகளில் சேர விரும்புவதில்லை என்றதொரு புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. இந்த பொது விடுமுறை பிரச்சனையை சரிசெய்வதன் மூலம் குவைத்தியர்களை தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளின் பக்கம் ஈர்க்க முடியும் என அரசு நம்புகின்றது.

எனவே, அரசின் பொது விடுமுறை நாட்களைப் போன்றே தனியார் துறையினருக்கும் பொது விடுமுறை வழங்கும் உத்தேசத் திட்டம் ஒன்றை அரசின் பரிசீலணைக்கான அனுப்பியுள்ளது குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன். நெல்லுக்கு (குவைத்தியர்களுக்கு) பாய்கின்ற நீர் புல்லுக்கும் (வெளிநாட்டினருக்கும்) பாயாமல் போய்விடுமா என்ன?

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

ராஜஸ்தானில் போட்டித்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி முகாமில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் பங்கேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.30
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இயங்கி வரும் கேரியர் பாயிண்ட் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான ஒரு வார கால சிறப்பு பயிற்சி முகாமில், அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளித் தாளாளர் வீ.சுப்ரமணியன், முதல்வர் என்.ரகுபதி, ஆசிரியர்கள் மற்றும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட 50 பேர் பங்கேற்றனர்.

முகாமில், ராஜஸ்தான் கோட்டா கேரியர் பாயிண்ட் பயிற்சி மைய ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு பிரெஞ்ச், அறிவியல், கணிதவியல், வேதிக்கணக்குப்பாடங்கள் ஆகியவற்றை பயிற்சியளித்தனர்.

இதுகுறித்து பள்ளித்தாளாளர் வீ.சுப்ரமணியன் கூறியது;
'மாணவர்களை மருத்துவம், பொறியியல் போன்ற போட்டித்தேர்விற்கு தயார் படுத்தும் வகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா கேரியர் பாயிண்ட் பயிற்சி மையத்தில் போட்டித்தேர்வுக்கான ஒரு வார கால பயிற்சி கட்டணமின்றி வழங்கப்பட்டது.

வரும் 2019-2020 ம் கல்வியாண்டு முதல், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 வருடமும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒரு வருடமும், NEET IIT-JEE நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியளிக்கப்பட உள்ளது. இதற்காக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா கேரியர் பாயிண்ட் பயிற்சி மையத்தின் பயிற்றுநர்களை பள்ளிக்கு வரவழைத்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுளோம். மேலும், 6 முதல், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டித்தேர்வுக்கான அடிப்படைப்பயிற்சி அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 

அமீரகத்தில் பேங்க் லோன் பிரச்சனையால் மயங்கி விழுந்த மனிதர்!

அதிரை நியூஸ்: டிச.30
அபுதாபியில் பேங்க் லோன் பிரச்சனையால் மயங்கி விழுந்த மனிதர்

பேங்க் லோன் வாங்குவதும் அதை முறையாக கட்டு வருவதும், கட்டாமல் அல்லது கட்ட இயலாமல் தடுமாறுவதும் நடப்பே. அதேபோல் வங்கியின் வாராகடன்களை வசூலிக்க வங்கிகளும் பல்வேறு உத்திகளை கையாளும், அதில் ஒன்று வசூலுக்காக அவுட்சோர்சிங் முகவர்களை நியமிப்பது. இந்த பேங்க் ஏஜென்ட்டுகளால் வாடிக்கையாளர் கஷ்டப்படுவதும், வாடிக்கையாளர்கள் தரும் குடைச்சல்களால் ஏஜென்டுகள் தலைதெறிக்க ஓடுவதும் நடப்பில் உள்ளதே.

அமீரகத்தில் ஒரு வங்கியில் ஒருவர் லோன் வாங்கியிருந்துள்ளார் ஆனால் முறையாக தவணையை கட்டவில்லை எனத் தெரிகிறது. இவரிடமிருந்து கடனை வசூலிக்க ஏஜென்ட் ஒருவர் நியமிக்கப்படுகின்றார். அதற்கான அத்தாட்சி கடிதமும் அவருக்கு வழங்கப்படுகிறது.

வேலையில் உடும்புப்பிடி உத்தமனாக மாறிய பேங்க் ஏஜென்ட் தனக்கிட்ட பணியை செவ்வனே செய்திட தினமும் ஒவ்வொரு ஓரு மணிநேரத்திற்கும் 20க்கு மேற்பட்ட முறைகள் போன் செய்து 'காசெங்கே?' எனக்கேட்டு தொடர் தொந்தரவு தந்து வந்துள்ளார். ஒருநாள் லோன் வாங்கியவரால் போனை எடுத்துப் பேச முடியாத சூழலில் அவரை ஏற்றிக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ உதவியாளர் ஒருவர் எடுத்து பதிலளிக்கின்றார்.

'யோவ்! நீ கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாம உங்க வாடிக்கையாளர் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்துட்டாரு! ஆஸ்பத்திரிக்கு அள்ளிக்கொண்டு போயிட்டிருக்கோம்' என்கிற அம்சத்தில் பதில் தந்துள்ளார் ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ உதவியாளர்.

தொடர் போன் தொல்லையால் உயர் ரத்த அழுத்த நோய்க்கு உள்ளாகிய லோன் வாங்கிய வாடிக்கையாளர் பேங்க் வசூல் ராஜா மீது போலீஸில் புகார் தருகின்றார் ஆனால் வங்கி ஏஜென்ட் தன் பணியை செய்ததற்காக சிக்கலில் மாட்டி விழிபிதுங்கி நின்றதை கண்ணுற்ற வாடிக்கையாளர் அவர் மீது பரிதாபப்பட்டு போலீஸ் கம்ப்ளைன்டை வாபஸ் வாங்கி ஏஜென்ட் வயிற்றில் பால் வார்த்துள்ளார். இந்நேரம் ஏஜென்ட் கண்டிப்பா வேறு வேலை தேடிக்கொண்டு இருப்பார் என நம்பலாம்!

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

துபை, அபுதாபி வாழ் இந்தியர்கள் மத்தியில் ஜன.11,12 ல் ராகுல் காந்தி உரை!

அதிரை நியூஸ்: டிச.30
துபை, அபுதாபியில் ஜன.11, 12ல் இந்தியர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசவுள்ளார்.

இந்தியாவின் பிரதான எதிர்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் எதிர்வரும் ஜனவரி 11 ஆம் தேதி மாலை 4 மணியளவில் துபை கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியர்கள் மத்தியில் பேசவுள்ளார். இந்த மைதானத்தில் சுமார் 25,000 பேர் அமர முடியும் என்பதுடன் 2015 ஆம் ஆண்டு இந்தியாவின் நடப்புப் பிரதமர் மோடி இதேபோன்றதொரு நிகழ்ச்சியில் இந்தியர்கள் மத்தியில் பேசிச் சென்றுள்ளார் என்பதும் நினைவுகூறத்தக்கது.

Dubai Cricket Stadium Location Map

https://www.google.com/maps/vt/data=SsxJL2uWAbiK6_6ooErY7Np9Px101wj8AdBoMps-z4wivxUVADbzfVCm5rB2zoCw4DEZynEWAjU6OhK_-MNBfCMiESsP2JGZ40ZQDzXkAuQ45STTzA3j1uYxDqz7O7dnFLEGTE4EzNt_LX-eh8NhFVHl6Q

முன்னதாக, ஜனவரி 11 ஆம் தேதி காலையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய வணிகர்களையும், மாணவர்களையும் சந்தித்து உரையாடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோன்றதொரு வணிகர் மற்றும் மாணவர் சந்திப்பு ஒன்றும் அபுதாபியில் ஜன. 12 காலையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஷேக் ஜாயித் பள்ளியையும் சுற்றிப் பார்க்கவுள்ளார்.

ஜனவரி 12 ஆம் தேதி மாலையில் அபுதாபி இந்தியன் சோஷியல் & கல்ச்சுரல் சென்டர் (ISC) அரங்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். 37 ஆண்டுகளுக்கு முன் மறைந்த இந்தியப் பிரதமரும் பாட்டியுமான இந்திரா காந்தி அவர்கள் கடந்த 1981 ஆம் ஆண்டு அமீரகத்திற்கு விஜயம் செய்ததற்குப் பின் அவரது குடும்பத்திலிருந்து பேரன் ராகுல் காந்தி அவர்களே மீண்டும் வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

ISC Abu Dhabi Location Map 

https://www.google.com/maps/vt/data=eGo4KZJOHvuE7_wa617lzUyZR0MgcT9dM4VrcOY8zQi8BwAluZPrfgoDBWPJqOW8MjZQza3wajQ3zboRlmv7j1nqxptSReQv0wcSGdHZesquMuFaxdSGZiqfFHKMXdKF4f2WimU3_l0-IitR7du0yVz9-w

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அமீரகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி (வீடியோ)

அதிரை நியூஸ்: டிச.30
ராஸ் அல் கைமா எமிரேட்டில் உள்ள ஜெபல் அல் ஜைஸ் மலைச்சிகரமே அமீரகத்தின் மிக உயரமான மலைச்சிகரமாகும். இதன் உயரம் 1,934 மீட்டர் என்பதுடன் இந்த மலைச்சிகரம் ஓர் சுற்றுலா பிரதேசமாகவும் விளங்குகின்றது. இதன் மலையுச்சி ஒன்றில் உலகிலேயே மிக உயரத்தில் அதாவது 1,680 மீட்டர் உயரத்தில் 2.8 கி.மீ தூரத்திற்கு ஜிப்லைன் (Zipline) எனப்படும் இரும்புக்கம்பி வடத்தில் சறுக்கியவாறு தொங்கிச் செல்லும் சாகச விளையாட்டு மையமும் உள்ளது. உயரத்தை ஒப்பீட்டுச் சொல்லதென்றால் 828 மீட்டரில் துபையில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புரூஜ் கலீஃபாவை விட இருமடங்கு உயரம் கொண்டதாகும்.

நேற்று மாலை ஜெபல் அல் ஜைஸ் மலைச்சிகரத்திற்கு அருகிலுள்ள மற்றொரு சிகரத்திற்கு மலைச்சாகசம் சென்ற இந்தியர் ஒருவர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக தகவல் வந்ததை அடுத்து 3 இமராத்திகள் (அமீரகத்தினர்) 1 வெளிநாட்டுக்காரர் உள்ளிட்ட 4 மருத்துவ மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் ஒன்றில் விரைந்து சென்றனர். இவ்வாறு விபத்தில் சிக்குவோரை மீட்கச்செல்வது இங்கு வழமையாக நடைபெறும் ஒன்றே.

நேற்று மாலை சுமார் 5.50 மணியளவில் மீட்புப்பணிக்காக சென்ற ஹெலிகாப்டர் எதிர்பாராவிதமாக 'ஜிப்லைனில்' சிக்கி விழுந்து நொறுங்கி தீப்பற்றியதை அடுத்து ஹெலிகாப்டரில் பயணம் செய்த நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர், இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன். விபத்தில் சிக்கிய 3 இமராத்திகள் மற்றும் 1 வெளிநாட்டுப் பிரஜை குறித்த மேலதிகத் தகவல்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Saturday, December 29, 2018

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமீனா அம்மாள் (வயது 66)

அதிரை நியூஸ்: டிச.29
அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.செ முகமது அப்துல்லா  அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி நெ.அ அகமது முகைதீன் (கனரா வங்கி) அவர்களின் மனைவியும், எம்.ஏ பாருக், எம்.ஏ அகமது முகைதீன், எம்.ஏ பஷீர் அகமது ஆகியோரின் சகோதரியும், பி.தாஜுதீன் அவர்களின் மாமியாரும், என்.எம் அகமது சலீம், என்.எம் அப்துல் காதர், என்.எம் ஹாஜா ஆகியோரின் சிறிய தாயாரும், முகமது இம்தியாஸ் அகமது ஹசன் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஆமீனா அம்மாள் (வயது 66) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (30-12-2018) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பிலால் நகர் பொதுமக்கள் சாலை மறியல் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.29
அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பிலால் நகரில் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வலியுறுத்தி கிழக்கு கடற்கரைச்சாலையில் மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கஜா புயலில் பாதிப்படைந்த ஏரிப்புறக்கரை வருவாய் கிராமப் பகுதிகளுக்கு அரசின் நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக வருவாய்துறை சார்பில் ஏரிப்புறக்கரை ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் டோக்கன் வழங்கி நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.

அதன்படி, அதிராம்பட்டினம் ஆஸாத் நகர், ஏரிப்புறக்கரை பிலால் நகர், ஆதம் நகர் ஆகிய பகுதியினருக்கு இன்று சனிக்கிழமை காலை டோக்கன் வழங்கப்பட்டன.

இதில், பிலால் நகர் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் புயலில் கடுமையாக பாதிப்படைந்தும், சிலருக்கு மட்டுமே நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையாக நிவாரணம் வழங்காமல் பாரப்பட்சம் காட்டப்படுவதாகவும், இதுகுறித்து முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் பெண் திடீர் மயக்கம்:
போராட்டத்தில் ஒரு பெண் திடீரென மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

போராட்டம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த சிறப்பு வட்டாட்சியர் அருள்ராஜ் மற்றும் அதிராம்பட்டினம் போலீஸார் போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இப்போராட்டம் காரணமாக அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)