.

Pages

Sunday, December 23, 2018

உரிய நிவாரணம் கேட்டு நீதிமன்றத்தை நாட தென்னை விவசாயிகள் முடிவு!

பேராவூரணி டிச.23-
நிவாரணம் கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர தென்னை விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளி எதிரில் உள்ள ஆனந்தா விழா அரங்கில் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி தென்னை விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற வேளாண் துறை அலுவலர் அக்ரி கே.ஆர்.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். எஸ்.நாகராஜன் வரவேற்றார். ஆவணம் க.அடைக்கலம் முன்னிலை வகித்தார். க.அன்பழகன், இ.வீ.ஏகாம்பரம், எஸ்.வி.காமராஜ், ஆர்.ரவிச்சந்திரன், இரா.வேலுச்சாமி, கொன்றைக்காடு தேவதாஸ், ஏ.கே.பழனிவேலு, முடச்சிக்காடு சேக் இப்ராகிம்ஷா, குமாரசாமி, ஒப்பந்தக்காரர் ராமநாதன், மல்லிகை வை.முத்துராமலிங்கம் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஏ.மெய்ஞானமூர்த்தி நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில், '' கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைையில் நிவாரணம் பெற வேண்டி வழக்கு தொடர்வது, கஜா புயலடித்து 35 நாட்களைக் கடந்தும், தென்னை விவசாயிகளுக்கு இதுவரை எந்த நிவாரணமும், அரசு உதவியும் கிடைக்காததைக் கண்டித்து போராட்டம் நடத்துவது, தென்னைக்கு அரசு அறிவித்த நிவாரணம் எந்தவகையிலும் தென்னை விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடாகாது. எனவே கடலூர் தானே புயலுக்கு அளித்தது போன்று, நிவாரணத்தை உயர்த்தி தரவேண்டும்.

கஜா புயலால் தங்கள் வாழ்வாதாரமான தென்னையை இழந்து, இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும், தென்னை விவசாயிகளையும் மக்கள் நலனையும் புறக்கணித்து இந்த இக்கட்டான நேரத்தில் வேலை நிறுத்தம் செய்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்தும், ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கள் வீடுகளை மறந்து மின் தொடர்பை ஏற்படுத்தி தருவதற்காக இரவு பகலாக உழைத்த மின்வாரிய ஊழியர்களையும், ஒப்பந்த தொழிலாளர்களையும் மின்வாரிய அதிகாரிகளையும் முழுமனதுடன் பாராட்டுகிறோம். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மிக விரைவில் மும்முனை மின்சாரம் பம்ப்செட்டுகளுக்கு வழங்க வேண்டும்.

மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின்படி, உடனடியாக தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து, தமிழ்நாடு அரசு நிதியை பெற்று கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி விரைந்து நிவாரணம் அளிக்க வேண்டும். தென்னை மரங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய மத்திய அரசே ஆவன செய்ய வேண்டும்.

தென்னை விவசாயிகளுக்கு மறுசீரமைப்பு செய்வதற்கு 5 வருடங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக விவசாய இலவச மின் இணைப்பு வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யவும் அல்லது நூறு சதவீத மானியத்துடன் சோலார் மின் இணைப்பு வழங்க வேண்டும்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வங்கிகளில் பெற்ற கல்வி கடன் மற்றும் விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இரு குழுக்கள் அமைத்து ஒன்று சட்ட நடவடிக்கைகளிலும், மற்றொரு குழு போராட்டங்களை வழி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.